19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி முழுவதும் சிறப்பாக செயல்பட்ட போதிலும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையை போலவே, 2024 நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையிலும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த அண்டர் 19 உலகக் கோப்பை இறுதிப்போட்டில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஒரு இந்தியன் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? ஆனால், அதுதான் உண்மை. 






ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய அந்த இந்தியனின் பெயர் ஹர்ஜாஸ் சிங். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை முழுவதும் ஹர்ஜாஸ் சிங், ஆஸ்திரேலிய அணிக்காக பேட்டிங்கில் பெரிதாக எதுவும் ரன்களை குவிக்கவில்லை. இறுதிப் போட்டிக்கு முன்பு 6 போட்டிகளில் விளையாடிய ஹர்ஜாஸ் சிங் வெறும் 49 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இருப்பினும், ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இவர் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தது. இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியிலும் கூட, ஆஸ்திரேலிய கேப்டன் ஹக் வெய்ப்ஜெனும், நிர்வாகமும்  ஹர்ஜாஸ் சிங்கை விளையாடும் லெவனில் சேர்த்தனர். இறுதிப்போட்டியில் ஹர்ஜாஸ் சிங் ஆஸ்திரேலிய அணி கொடுத்த நம்பிக்கையை காப்பாற்றி, சாம்பியன் ஆகும் இந்திய அணியின் கனவை தகர்த்தார். 


23வது ஓவடில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்தபோது, ஆஸ்திரேலிய அணியால் 200 ரன்களை கூட எட்டாது என தோன்றியது. ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஜாஸ் சிங் களம் இறங்கி 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் எடுத்து முக்கியமான இன்னிங்ஸ் ஆடினார். இதுவே, ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. 


யார் இந்த ஹர்ஜாஸ் சிங்..?


கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி ஹர்ஜாஸ் சிங், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். இவரது தந்தை இந்தர்ஜித் சிங், பஞ்சாப் மாநில குத்துச்சண்டை சாம்பியன் மற்றும் இவரது தாயார் அவிந்தர் கவுர் நீளம் தாண்டுதல் வீராங்கனை ஆவார்கள். இவரது குடும்பம் 2000 ஆம் ஆண்டு சண்டிகரில் இருந்து சிட்னிக்கு குடிபெயர்ந்தது.






ஹர்ஜாஸ் தனது எட்டு வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். நியூ சவுத் வேல்ஸில் உள்ள உள்ளூர் ரெவ்ஸ்பி ஒர்க்கர்ஸ் கிரிக்கெட் கிளப்பில் மாற்று வீரராக களமிறங்கி, தனது அடுத்தக்கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். 


உஸ்மான் கவாஜாவை தனது ரோல் மாடலாக கருதும் ஹர்ஜாஸ் சிங், மைக்கேல் கிளார்க், பில் ஹியூஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே போன்றவர்களுக்கு பயிற்சியாளராக இருந்த நீல் டி'கோஸ்டாவினால் பயிற்சி பெற்றார்.


ஹர்ஜாஸ் சிங்கின் தாக்கம்:


ஹர்ஜாஸ் பெவிலியன் திரும்பியபோது அணியின் ஸ்கோர் 200 ஐ நெருங்கியது. ஹர்ஜாஸ் அணியின் அரைசதத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்தது. இது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் இது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. 


பதிலுக்கு பேட்டிங் செய்த இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. ஏழு இந்திய அணியின் பேட்ஸ்மேன்களால் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை. தொடக்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் சிங் அதிகபட்சமாக 47 ரன்களும், எட்டாம் நிலை வீரரான முருகன் அபிஷேக் 42 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் மஹாலி பியர்ட்மேன் மற்றும் ரஃபே மெக்மில்லன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.