U19 World Cup IND Vs SA: ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட், அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 


U19 உலகக் கோப்பை:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி, கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, குரூப் சுற்று மற்றும் சூப்பர் 6 சுற்று முடிவுகளை தொடர்ந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.


இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதல்:


இந்நிலையில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. பெனோனி நகரில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 01.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியின் நேரலைய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


வரலாறு படைக்குமா இந்தியா?


U-19 உலகக் கோப்பையை 5 முறை வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணி, 2022ம் ஆண்டு இங்கிலாந்தை வீழ்த்தி நடப்பு சாம்பியனாக இந்த ஆண்டு உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது. இதனால், 6வது முறையாகவும் இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது. நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும், உதய் சாஹரன் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால், இன்றைய போட்டியிலும் வென்று, மீண்டும் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


மறுமுனையில் போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா அணி, குரூப் சுற்றில் மேற்கிந்திய தீவுகளிடம் தோல்வியுற்றது. சூப்பர் 6 சுற்றில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ஒருமுறை மட்டுமே U-19 உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்கா அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மைதானம் எப்படி?


பெனோனியில் உள்ள வில்லோமூரே மைதானமானது வழக்கமாக, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைகிறது. இதனால், லோ-ஸ்கோரிங் போட்டியை காண அதிக வாய்ப்புள்ளது. இதுவரை அங்கு நடைபெறுள்ள 27 ஒருநாள் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணி 8 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 


அணி விவரங்கள்:


இந்தியா: ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, பிரியன்சு மோலியா, உதய் சாஹரன்(கேப்டன்), சச்சின் தாஸ், முஷீர் கான், ஆரவெல்லி அவனிஷ், முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே, ஆராத்யா சுக்லா, அன்ஷ் கோசாய், தனுஷ் கவுடா, நமன் திவாரி கவுடா , ருத்ரா படேல், பிரேம் தேவ்கர், முகமது அமான், இன்னேஷ் மகாஜன்


தென்னாப்பிரிக்கா:  பிரிடோரியஸ், ஸ்டீவ் ஸ்டோல்க், டேவிட் டீகர், ரிச்சர்ட் செலட்ஸ்வான், டெவான் மரைஸ், ஜுவான் ஜேம்ஸ் (கேப்டன்), ரோமஷன் பிள்ளே, ரிலே நார்டன், டிரிஸ்டன் லூஸ், மொகேனா, வேனா மபாகா, மார்டின் குமலோ, ஆலிவர் வைட்ஹெடோ, சிஃபோ பொட்சேன், என்டாண்டோ ஜூமா, ரயீக் டேனியல்ஸ்