ஐசிசி யு-19 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-உகாண்டா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று உகாண்டா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்சி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரும் ராஜ் பாவாவும் சேர்ந்து உகாண்டா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 


 


குறிப்பாக 3ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 206 ரன்கள் குவித்து அசத்தியது. ரகுவன்சி 120 பந்துகளில் 22 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்களுடன் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ராஜ் பாவா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 108 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 14 பவுண்டரிகளுடன் 162* ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்தது. 


 






இதையடுத்து 406 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி உகாண்டா அணி விளையாடியது. அந்த அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறியது. 50 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட் இழந்து பறி தவித்தது. இறுதியில் 19.4 ஓவர்களில் 79 ரன்களுக்கு உகாண்டா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 326 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த மகத்தான வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் 29ஆம் தேதி நடைபெறும் காலிறுதிப் போட்டியில் இந்திய அணி நடப்புச் சாம்பியன் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அந்தப் போட்டியில் 2020ஆம் ஆண்டு அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழி தீர்க்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க: 103 ரன்னுக்கு மொத்தமும் காலி.. இடிந்துபோன இங்கிலாந்து.. - வானை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!