இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், ஐ.சி.சி. சர்வதேச டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டுள்ளது.


வில்லியம்சன் முதலிடம்:


இந்த தரவரிசைப்படி, டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் நியூசிலாந்தின் கேப்டன் வில்லியம்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 883 புள்ளிகளுடன் தற்போது முதலிடத்தில் உள்ளார். ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டியில் அபார சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் கிடுகிடுவென 4 இடங்கள் முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர் 882 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.


ஆஷஸ் தொடரின் 3வது போட்டியிலே சிறப்பான இன்னிங்சை ஆடினால் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்த ஜோ ரூட் கடந்த டெஸ்ட்டில் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் ஜோ ரூட் 4 இடங்கள் சரிந்து 866 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார். 


டாப் 10ல் இல்லாத விராட், ரோகித்:


பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஒரு இடம் குறைந்து 6வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ரிஷப்பண்ட் 758 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார். விராட்கோலி, ரோகித்சர்மா யாருமே டாப் 10 தரவரிசையில் கூட இல்லை. ரோகித் 12வது இடத்திலும், விராட்கோலி 14வது இடத்திலும் உள்ளனர்.


பந்துவீச்சாளர் தரவரிசையில் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 860 புள்ளிகளுடன் உள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 2 இடங்கள் முன்னேறிய 826 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஷஸ் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன்  பெரியளவில் ஏதும் தாக்கத்தை ஏற்படுத்தாததால், ஆண்டர்சன் 2 இடங்கள் சரிந்து 4வது இடத்திற்கு கீழிறங்கியுள்ளார்.


ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ள நாதன் லயன் ஒரு இடங்கள் பின் தங்கி 7வது இடத்தில் உள்ளார். மற்ற இந்திய வீரர்களில் பும்ரா 772 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், ஜடேஜா 9வது இடத்திலும், ஸ்டூவர்ட் பிராட் 10வது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் ஒரு இடம் முன்னேறி 4வது இடத்திற்கு சென்றுள்ளார். ஜோ ரூட்டும் ஒரு இடம் முன்னேறிய 7வது இடத்திற்கு சென்றுள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 434 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் இரண்டாவது இடத்திலும், அக்‌ஷர் படேல் 5வது இடத்திலும் உள்ளனர்.


மேலும் படிக்க: Watch Video: முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானை சந்தித்த கோலி, ரோகித்.. வீடியோவை பகிர்ந்து பெருமைப்பட்ட பிசிசிஐ!


மேலும் படிக்க: BCCI: அஜித் அகர்கருக்கு அடித்த ஜாக்பாட்..! ஒரேடியாக தலைமை தேர்வாளர் சம்பளத்தை உயர்த்திய பிசிசிஐ.. எவ்வளவு தெரியுமா?