2021 டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நான்காவது நாளான நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில், நடப்பு சாம்பியன்ஸ் வெட்ஸ்ட் இண்டீஸை தென்னாப்ரிக்காவும், நியூசிலாந்தை பாகிஸ்தானும் வீழ்த்தியுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் நியூசிலாந்தை வெல்ல வேண்டும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வேண்டியதன் பின்னணி என்ன? சூப்பர் 12 சுற்றில் இருந்து அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெற போவது எந்த அணிகள் என்பதை பார்ப்போம். 


நேற்று இரவு 7 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்து பேட்டர்கள் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். ஹாரீஸ் ராஃப்பின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத நியூசிலாந்து பேட்டர்கள் சுமாரான ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதிகபட்சமாக டேரில் மிட்செல் (27), டெவோன் கான்வே (27) ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் பெளலர்கள் ஹாரீஸ் ராஃப் (4), ஷாயீன் அஃப்ரிதி (1), இமாத் வாசிம் (1), முகமது ஹஃபீஸ் (1) ஆகியோர் விக்கெட்டுகள் எடுத்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி.


எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஓப்பனர்கள் பாபர், ரிஸ்வான் அதிரடியாகவே தொடங்கினர். ஆனால், பாகிஸ்தான் ஓப்பனர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைப்பதில் மும்முரமாக இருந்த நியூசிலாந்துக்கு டிம் சவுதி ப்ரேக் த்ரூ தந்தார். 9 ரன்களுக்கு கேப்டன் பாபரை வெளியேற்ற, சேஸிங்கின் வேகம் குறைந்தது. கடைசி வரை, இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருப்பதாக இருந்தது. ஆனால், 18.4 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 135 ரன்கள் எடுத்து போட்டியை கைப்பற்றியது. 



நடப்பு டி-20 உலகக்கோப்பை தொடரில், அடுத்தடுத்து இரண்டு முக்கிய அணிகளை வீழ்த்தி கெத்து காட்டுகிறது பாகிஸ்தான். இனி, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியா அணிகளுக்கு எதிரான போட்டிகளே மிதம் இருப்பதால், இந்த வெற்றி மூலம் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது பாகிஸ்தான்.


Also Read: Sardar Udham | Amazon Prime-இல் `சர்தார் உத்தம்’ பாத்தாச்சா? படம் பாக்குறதுக்கு முன்னாடி இதெல்லாம் தெரிஞ்சுகோங்க..


பாகிஸ்தானின் வெற்றி இந்தியாவுக்கு ஏன் சாதகம்?


பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணிக்கு இனி வரும் போட்டிகள் மிக முக்கியமானதாக உள்ளது. பாகிஸ்தானும், நியூசிலாந்தும் மற்ற 3 அணிகளான ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியாவை வீழ்த்தினால், இந்தியாவுக்கு சிக்கலாகும். 


ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளோடு அதிரடியான ரன் ரேட்டை கொண்டுள்ளது. இதனால், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் டஃப் கொடுத்து வருகிறது.


வலுவான இரண்டு அணிகளை வென்றுவிட்ட பாகிஸ்தான், இனி இருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் க்ரூப்:2-ல் முதல் இடத்தில் நிறைவு செய்து அரை இறுதிக்கு முன்னேறிவிடும். இந்தியாவைப் பொருத்தவரை, நியூசிலாந்தை வீழ்த்தி, மற்ற 3 அணிகளையும் வீழ்த்தினால், இரண்டாவது இடத்தில் நிறைவு செய்து அரை இறுதிக்கு முன்னேறும். 



நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருந்தால், இந்தியாவுக்கு இனி வரும் போட்டிகளில் எல்லாம் கட்டாய வெற்றி தேவையானதாக இருந்திருக்கும். நியூசிலாந்தை பாகிஸ்தான் தோற்கடித்தது மூலம், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு கிட்டத்தட்ட ஒரே நிலைமைதான். இதனால், ஞாயிற்றுக்கிழமை போட்டி மிக முக்கியமானதாக இருக்கப்போகின்றது.


இந்த காரணத்தினால்தான், பாகிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்த வேண்டுமென இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருந்தனர். அதே போல, அசத்தலாக விளையாடிய பாகிஸ்தான் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அரை இறுதி வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண