இன்று சர்தார் உத்தம் சிங்கின் பிறந்தநாள்..
சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் ஷூஜித் சிர்கார் இயக்கிய `சர்தார் உத்தம்’ திரைப்படம் வெளியாகி, பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளைப் பெற்றது. இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்பப்பட்ட `சர்தார் உத்தம்’ இந்திய விடுதலைப் போரில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பேசும் கதையைக் கொண்டிருப்பதால், மற்றொரு நாட்டைப் பற்றி விமர்சிக்கிறது என்று கூறப்பட்டு ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டது.
விக்கி கௌஷல், அமோல் பராஷர், பனிடா சந்து முதலானோர் நடித்துள்ள `சர்தார் உத்தம்’ மறைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங்கின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுகிறது. `சர்தார் உத்தம்’ படத்தில் காட்டப்படும் உத்தம் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்து நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. ஜாலியன்வாலா பாக் படுகொலை ஏற்படுத்திய தாக்கம்
1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று அம்ரித்சரின் ஜாலியன்வாலா பாக் பகுதியில் நிகழ்ந்த மாபெரும் படுகொலை இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு இருண்ட பக்கமாக இடம்பெற்றுள்ளது. இந்திய விடுதலை இயக்கத்திற்குப் பின்னடைவாகவும், பிரிட்டிஷ் அரசு தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டவும் இந்த மோசமான நிகழ்வு அமைந்தது. ஜாலியன்வாலா பாக் படுகொலை உத்தம் சிங்கின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, அவரை அரசியல் நோக்கி வரவழைக்கும் ஒன்றாக அமைந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்க வேண்டும் என உத்தம் சிங் முடிவு செய்த போது அவருக்கு வயது இருபது மட்டுமே!
2. உத்தம் சிங் - பகத் சிங் இடையிலான அழகான நட்பு
உத்தம் சிங்கின் உற்ற தோழராக விளங்கியவர் பகத் சிங். இருவரும் முதன்முறையாக சிறையில் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. உத்தம் சிங், பகத் சிங்கைத் தனது குருவாக கருதினார். உத்தம் சிங்கின் வாழ்க்கையில் பகத் சிங் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. பகத் சிங்கின் கொள்கைகளைப் பின்பற்றிய உத்தம் சிங், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக பகத் சிங்கைப் போலவே வீரத்துடன் ஈடுபட்டார்.
3. வெவ்வேறு வேடங்கள்.. வெவ்வேறு வேலைகள்
ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குக் காரணமான அன்றைய பஞ்சாப் மாகாண கவர்னர் மைக்கேல் ஓ’ட்வையரைக் கொன்ற உத்தம் சிங், லண்டன் வரை செல்வதற்கும், லண்டனில் வாழ்வதற்கும் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை எடுத்துள்ளார். வெவ்வேறு உடைகள் அணிந்து, வெவ்வெறு வேடங்களில் உலகின் பல பகுதிகளில் வாழ்ந்த உத்தம் சிங், Elephant Boy என்ற ஆங்கிலப் படத்தின் படப்பிடிப்புகளிலும் பணியாற்றியுள்ளார். மேலும், பெயிண்டர், தச்சர், ஃபேக்டரி ஒன்றில் வெல்டிங் பணியாளர், உள்ளாடைகள் விற்பனை செய்பவர் முதலான பல்வேறு பணிகளையும் மேற்கொண்டார் உத்தம் சிங்.
4. உத்தம் சிங்கை உலகறியச் செய்த நிகழ்வு
1940ஆம் ஆண்டு, மார்ச் 13 அன்று, உத்தம் சிங் மைக்கேல் ஓ’ட்வையரை லண்டனில் சுட்டுக் கொன்றார். தனது ரிவால்வரைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்திய உத்தம் சிங், உலகம் முழுவதும் மக்கள் புரட்சியைக் குறித்து சிந்திப்பதுடன், இந்தியர்கள் ஜாலியன்வாலா பாக் படுகொலையை மறக்கவில்லை என்பதையும் உணர்த்தும் செய்தியாக இந்தக் கொலையைச் செய்தார். மைக்கேல் ஓ’ட்வையர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, காவல்துறை கைது செய்யும் வரை அமைதியாகக் காத்துக் கொண்டிருந்தார் உத்தம் சிங்.
5. ஒற்றுமையின் சின்னம்
பிரிட்டிஷ் அரசால் சிறை வைக்கப்பட்டிருந்த போது, இந்தியாவில் வெவ்வேறு மதத்தினருன் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடுவதற்காக ஒன்றிணைய வேண்டும் எனக் கூறி, 36 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் உத்தம் சிங். அவரது உண்ணாவிரதம் இந்தியாவில் பல்வேறு மதத்தினராலும் மதிக்கப்பட்டது. சிறைத்தண்டனை பெற்ற போது, இந்தியர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாகத் தன்னை `ராம் முகமது சிங் ஆசாத்’ என்று அடையாளப்படுத்திக் கொண்டவர் உத்தம் சிங்.
`சர்தார் உத்தம்’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது.