வரும் ஜூன் 2ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பைத் தொடர்களிலேயே இம்முறைதான் அதிக அணிகள் களமிறங்குகிறது. இதனால் இம்முறை உலகக்கோப்பைகான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் ஜூன் 5-ஆம் தேதி அயர்லாந்து அணியை எதிர்த்து களமிறங்கவுள்ளது. இந்த போட்டி நியூ யார்க்கில் உள்ள நாசவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் டி20 உலகக்கோப்பைக்காகவே பிரத்யேகமாக புதிதாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது. 


ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைத் தொடர்களில் பங்கு பெறும் அணிகள் அணியும் ஜெர்சியில் ஐசிசி நடத்தும் தொடருக்கான லோகோ கட்டாயம் இடம் பெற்றிருக்கும். இதனால் அனைத்து அணிகளும் ஐசிசி தொடர்களுக்காக பிரத்யேகமான ஜெர்சிகளை அறிமுகப்படுத்தும். அவ்வகையில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி வீரர்களுக்கு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான புதிய ஜெர்சி மற்றும் வீரர்களுக்கான கிட்டினை பிசிசிஐ அறிமுகம் செய்தது.


இந்த அறிமுக விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த அறிமுக விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக உலகப் புகழ் பெற்ற நிறுவனமான அடிடாஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. 






 இந்திய அணியின் இந்த ஜெர்சி குறித்து பல்வேறு விதமான கருத்துக்களை இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக இந்த ஜெர்சி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஜெர்சியைப் போல் இருப்பதாக பலர் கருத்து கூறினர். இந்நிலையில் இந்த ஜெர்சியின் அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வு நடைபெற்றது. 


டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி


உலகக்கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா,அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.