ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் சீசன் 17 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இன்று (மே 12) 62 வது லீக் போட்டி பெங்களூரு சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்தவகையில் முதல் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ரஜத் பட்டிதர் 52 ரன்களை குவித்தார். பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
188 ரன்கள் இலக்கு:
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜேக் ஃப்ரேசர் - மெக்குர்க் களம் இறங்கினார்கள். 2 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற டேவிட் வார்னர் 1 ரன் எடுத்து ஸ்வப்னில் சிங் பந்தில் நடையைக்கட்டினார். பின்னர் வந்த அபிஷேக் போரலும் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க 24 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
ஆனால் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஜேக் ஃப்ரேசர் - மெக்குர்க் அதிரடியாக விளையாட அவருடன் ஜோடி சேர்ந்தார் ஷாய் ஹோப். இருவரும் வேகமாக டெல்லி அணிக்கு ரன்களை சேர்த்துக் கொடுத்தனர்.
அப்போது ஜேக் ஃப்ரேசர் - மெக்குர்க் ரன் அவுட் முறையில் வெளியேறினார். மறுபுறம் நிதானமாக விளையாடிக்கொண்டிருந்தார் ஷாய் ஹோப். பின்னர் களம் இறங்கிய குமார் குஷாக்ரா பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அப்போது களம் இறங்கிய அக்ஸர் படேல் அதிரடியாக விளையாடினார்.
ஆர்சிபி அசத்தல் வெற்றி:
டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 ரன்களில் நடையைக் கட்ட ராசிக் தார் சலாம் அக்ஸர் படேலுடன் பார்டர்ன்ஷிப் அமைத்தார். இதனிடையே தன்னுடைய 30 பந்துகளில் பதிவு செய்தார் அக்ஸர் படேல். அப்போது ராசிக் தார் சலாம் 10 ரன்களில் நடையைக்கட்டினார். அக்ஸர் படேல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 57 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இவ்வாறாக 19.1 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தவகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி அசத்தியது. தாங்கள் விளையாடிய கடைசி 5 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.