Shubman Gill T20: ஐசிசி டி20 உலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வெல்ல, சுப்மன் கில் அணியில் இருப்பது பெரும் தடைக்கல்லாக மாறலாம் என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
ஹர்திக்கின் ஆசை:
தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அட்டகாசமாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வித்திட்ட,ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். காயம் காரணமாக ஓய்விலிருந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு திரும்பியதும் கிடைத்த வெற்றி குறித்து பேசுகையில், ”டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றதை குறிக்கும் விதமாக, ஜெர்சியில் உள்ள இரண்டு நட்சத்திரங்களை விரைவில் மூன்று நட்சத்திரங்களாக மாற்ற வேண்டும்” என ஹர்திக் பாண்ட்யா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால், அந்த ஆசைக்கு சுப்மன் கில் பெரிய ஆபத்தாக இருப்பார் என்பதே வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாகவே உள்ளது.
மீண்டும் சொதப்பிய கில்
அதிரடியான பேட்டிங் தேவைப்படும் டி20 போட்டிகளுக்கு சுப்மன் கில் பொருத்தமாக இருக்கமாட்டார் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. அதையும் மீறி, துணை கேப்டன் பதவியுடன் அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதனை முறையாக பயன்படுத்திக் கொள்கின்றாரா? என்றால் அதுவும் இல்லை. நேற்றைய தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் வெறும் நான்கு ரன்களுக்கு நடையை கட்டினார். கடைசியாக விளையாடிய 13 போட்டிகளில் ஒன்றில் கூட கில் அரைசதம் கடக்கவில்லை. 2024ம் ஆண்டு ஜிம்பாபே அணிக்கு எதிராகவே அவரது கடைசி அரைசதம் பதிவாகியுள்ளது. இருந்தாலும் கில்லுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளால் தொடக்க ஆட்டக்காரராக தன்னை நிரூபித்த சாம்சனிற்கு இழைக்கப்படும் அநீதியாகவே பார்க்கப்படுகிறது.
”அணியின் சூழலை குலைக்கும் கில்”
ஆசியக் கோப்பையின் மூலம் கில் டி20 அணிக்குத் திரும்பியதிலிருந்து, இந்திய டாப்-ஆர்டரின் அதிரடி பேட்டிங் திறன் குறைந்துள்ளது. அபிஷேக்-கில் சகாப்தத்தில், இந்தியா 13 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே 200 ரன்களைக் கடந்துள்ளது. அதுவே அபிஷேக்-சஞ்சு சாம்சன் கூட்டணி சகாப்தத்தில் 12 போட்டிகளில் ஆறுமுறை 200 -க்கும் அதிகமான ரன்களை இந்தியா கடந்துள்ளது. கில்லின் இருப்பு அணிக்கு உறுதியைக் கொண்டுவரும் என்று கருதப்பட்டது. ஆனால் அது இந்தியாவின் வரையறுக்கும் டி20 பலமான ஆக்ரோஷத்தை நீர்த்துப்போகச் செய்துள்ளது.
கில்லிற்கு வாய்ப்புகள் வழங்கும் சோதனைகள் தேவையா?
சஞ்சு சாம்சன் கடந்த ஆண்டில் மூன்று டி20 சதங்களை அடித்துள்ளார். இது டி20 கிரிக்கெட்டின் எந்த சகாப்தத்திலும் நம்பமுடியாத சாதனை. இருப்பினும், கில் அதிகாரப்பூர்வ துணைகேப்டன் பதவியைக் கொண்டிருப்பதால், சஞ்சு சாம்சன் பெஞ்சை தேய்த்துக் கொண்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கில் தவிர்க்கமுடியாதவர். அது தகுதி அடிப்படையிலானது. ஆனால் டி20 போட்டிகளில், அவரது இருப்பு கவுதம் கம்பீரின் கட்டாயத்தின் பெரில் உருவாக்கப்படுவதாக தெரிகிறது.
கில்லுக்கு எதிராக எந்த கருத்துகளையு திணிக்க முற்படவில்லை. அவர் இந்திய அணிக்கான நம்பிகை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். ஆனால் இந்திய டி20 அணியில் நுழைவதற்கு அவருக்கு போதுமான நேரம் உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை அவரை விட சஞ்சு சாம்சனுக்குத்தான் அதிகம் சொந்தமானது .