தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது
முதலாவது டி20:
இந்தியா மற்று தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி 20 போட்டி கட்டாக் பராபத்தி மைதானத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தோற்கும் 22வது டாஸ் இதுவாகும்.
கில் ஏமாற்றம்:
இந்திய அணியில் சஞ்சு சாம்சன், வாஷிங்டன், ஹர்சித் ராணா ஆகியோருக்கு பதிலாக ஜிதேஷ், கில் , அக்சர் ஆகியோர் அணியில் இடம் பெற்றிருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். கில் தனது ரன் கணக்கை பவுண்டரியுடன் தொடங்கினாலும் லுங்கி ங்கிடி பந்துவீச்சில் நடையைக்கட்டினார்.
அடுத்த வந்த கேப்டன் சூர்யாக்குமார் யாதவும் 12 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.
பெரிது எதிர்ப்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா சிம்பாலா பந்துவீச்சில் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது, அதன் திலக் வர்மா மற்றும் அக்சர் பட்டேல் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர்.
பாண்டியா ருத்ரதாண்டவம்:
திலக் 26 ரன்களும், அக்சர் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் ஹர்திக் பாண்டியா வந்த முதல் பந்தில் இருந்தே தனது அதிரடியை காட்டினார். 28 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் அடித்து இந்திய அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்துச்சென்றார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 58 ரன்களுடன் இறுதி வரை களத்தில் இருந்தார்.
74 ரன்னுக்கு ஆல் அவுட்:
176 ரன்கள் என்கிற இழக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. இந்திய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் பெவிலியன் போவதும் வருவதுமாக இருந்தனர், இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 74 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைந்தது,இந்திய தரப்பில் பும்ரா, அர்ஷ்தீப், வருண், அக்சர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் மற்றும் சிவம் துபே தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தங்களது குறைந்தபட்ட டி20 ஸ்கோரையும் பதிவு செய்துள்ளது, இதற்கு முன்னர் ராஜ்கோட்டில் 2022 ஆம் ஆண்டு 87 ஆல் அவுட் ஆனதே குறைந்தப்பட்ச ஸ்கோராக இருந்தது.