டி20 உலகக்கோப்பை அமெரிக்காவில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்காவும் - கனடாவும் நேருக்கு நேர் மோதின. இதில், டாஸ் வென்ற அமெரிக்கா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. கனடா 20 ஓவர்களில் 194 ரன்கள் குவித்தது. 


வெற்றியுடன் தொடங்கிய அமெரிக்கா:


இதையடுத்து, 195 ரன்கள் என்ற இலக்குடன் அமெரிக்கா களமிறங்கியது. ஸ்டீவ் டெய்லர் டக் அவுட்டாகியும், கேப்டன் மோனங்க் படேல் 16 ரன்னிலும் அவுட்டாக ஆண்ட்ரீஸ் கோவ்ஸ் - ஆரோன் ஜோன்ஸ் அதிரடியாக ஆடினர். குறிப்பாக, ஆரோன் ஜோன்ஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். அவரது அதிரடியால் அமெரிக்கா இலக்கை நோக்கி முன்னேறியது. ஆண்ட்ரீஸ் கோவ்ஸ் 46 பந்துகளில் 65 ரன்களுக்கு அவுட்டாக, ஜோன்ஸ் தனி ஆளாக அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதனால், அமெரிக்கா 17.4 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 197 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


ஜோன்ஸ் வெறித்தனம்:


இதன்மூலம் அமெரிக்கா இந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. அமெரிக்காவிற்காக அதிரடியாக ஜோன்ஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி 10 சிக்ஸருடன் 94 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜோன்ஸ் வெறும் 22 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.


முதலில் களமிறங்கிய கனடா அணிக்காக ஆரோன் ஜான்சன் – நவ்நீத் தாலிவால் அதிரடியான தொடக்கம் அளித்தனர். ஆரோன் ஜான்சன் 23 ரன்களில் அவுட்டாக, பர்கத்சிங் 5 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த நிகோலஸ் கிர்டன் – நவ்னீத் அதிரடியாக ஆடினர்.


நவ்னீத் - ஸ்ரேயஸ் அதிரடி:


பவுண்டரி, சிக்ஸர் என இருவரும் விளாசினர். நன்றாக ஆடிக்கொண்டிருந்த நவ்னீத் 44 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். மறுமுனையில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த நிகோலஸ் 31 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் ஸ்ரேயஸ் 16 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 51 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். இதனால், கனடா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.


கனடா அணி நிர்ணயித்த கடின இலக்கை நோக்கி களமிறங்கிய அமெரிக்காவிற்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்தாலும் ஆண்ட்ரீஸ் கோவ்ஸ் – ஆரோன் ஜோன்ஸ் ஜோடியின் அதிரடியால் ரன்கள் குவிந்தது. இலக்கை நோக்கி அணியை நகர்த்திய ஆண்ட்ரீஸ் 46 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 65 ரன்கள் எடுத்து அவுட்டானார்.


ஆனாலும், ஆரோன் ஜோன்ஸ் தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்தததால் கனடா பந்துவீச்சாளர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். ஜோன்ஸ் 40 பந்துகளில் 4 பவுண்டரி 10 சிக்ஸருடன் 94 ரன்கள் எடுத்ததால் அமெரிக்கா 17.4 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


முதன்முறையாக டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்தும் அமெரிக்கா இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியிருப்பது அமெரிக்க கிரிக்கெட் அணிக்கும், அந்த அணியின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.