உலககோப்பை போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்காக, ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் நிர்வாகமும் உலககோப்பையில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளை அறிவித்து வருகின்றன. உலககோப்பை டி20 தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.


15 பேர் கொண்ட இந்த அணிக்கு கேப்டனாக நிகோலஸ் பூரண் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக அந்த அணியின் பலமிகுந்த ஆல் ரவுண்டர்களான ஆந்ரே ரஸல் மற்றும் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர்களான சுனில் நரைன் இருவரும் தேர்வாகவில்லை. இது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




இந்த நிலையில், ஆந்த்ரே ரஸல் மற்றும் சுனில் நரைன் இருவரும் அணியில் இடம்பெறாததற்கான காரணம் வெளியாகியுள்ளது. ஆல் ரவுண்டரான ரஸல் தற்போது கரீபியன் பிரிமீயர் லீக்கில் ஆடி வருகிறார். ரஸலின் பார்ம் தற்போது மிகவும் மோசமாக இருப்பதால் அவரை அணியில் சேர்ப்பதை தேர்வுக்குழு தவிர்த்துள்ளது.






இதுதொடர்பாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் ஹெய்ன்ஸ் கூறியதாவது, இந்தாண்டு தொடக்கத்தில் ரஸலுடன் சந்திப்பு நடத்தினோம். அவரது போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அவரது பார்ம் சிறப்பாக இல்லை. இந்த சூழலில், அவரை கடந்து செல்வதுதான் நல்லது என்று முடிவு செய்தோம். அவருக்கு பதிலாக நன்றாக பார்மில் உள்ள வீரருடன் ஆடுவது நல்லது என்று தோன்றியது.




உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளர் நரைன் இடம்பெறாதது குறித்து விளக்கம் அளித்த ஹெய்ன்ஸ், நிகோலஸ் பூரன் சுனில் நரைனிடம் பேசினார். ஆனால், அவர் உலககோப்பையில் விளையாடுவதற்கு விருப்பமில்லை என்பதுபோல கூறினார் என்று விளக்கம் அளித்துள்ளார். உலககோப்பைத் தொடரில் முன்னணி வீரர் ஒருவர் விளையாட விருப்பமில்லை என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக சம்பள பிரச்சினை நிலவி வருவதால் அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஆடுவதைக் காட்டிலும் ஐ.பி.எல். போன்ற பிரிமீயர் லீக்குகளில் ஆடுவதிலே விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.






நிகோலஸ் பூரண் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் துணை கேப்டன் ரோவ்மென் பாவெல், காரியா, சார்லஸ், காட்ரெல், ஹெட்மயர், ஹோல்டர், ஹொசைன், ஜோசப், பிரண்டன் கிங், லீவிஸ், மேயர்ஸ், மெக்காய், ரெய்பர், ஸ்மித் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.