உலகக் கோப்பை டி20 தொடரில் நாளைய ஆட்டத்தில் பாகிஸ்தானும், இங்கிலாந்தும் மோதுகின்றன. எட்டாவது iடி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவும், நியூசிலாந்து தோல்வி அடைந்து வெளியேறின. இதையடுத்து, பாகிஸ்தானும், இங்கிலாந்தும் பைனலுக்கு முன்னேறியுள்ளன.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதும் இந்த ஆட்டம் மெல்போர்ன் நகரில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் அரங்கேறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
நேருக்கு நேர்
20 ஓவர் உலக கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன் 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதே நேரம் அந்த ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் தான் வென்றது. அடுத்து 2010-ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரின் போது இவ்விரு அணிகளும் 'சூப்பர் 8' சுற்றில் சந்தித்தன. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டு உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது.
பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் 2009இல் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இரு அணிகளில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றாலும் அது அந்த அணிக்கு இரண்டாவது உலகக் கோப்பை ஆகும்.
மழையால் ஆட்டம் பாதிக்குமா?
இறுதிப்போட்டி நடைபெறும் மெல்போர்னில் நாளை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
என்ன ஆகும்?
ஒருவேளை மழை பெய்தாலும் ரிசர்வ் டே என்றழைக்கப்படும் மாற்று நாள் ஆட்டம் நடத்தப்படும். அந்த ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற வாய்ப்புள்ளது. அதேநேரம், திங்கள்கிழமையும் மழை பெய்து ஆட்டம் நடத்த முடியாத சூழ்நிலை வந்தால், இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும். ஒருவேளை இரு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் விளையாடி இருந்தால் டிஎல்எஸ் முறைப்படி வெற்றி பெற்றது எந்த அணி என்பது முடிவு செய்யப்படும்.
இதுபோன்ற சூழ்நிலையில், ஓவர்களை குறைத்து போட்டியை நடத்தவே வாய்ப்பு அதிகம். நாளை ஆட்டம் தொடங்கி நடைபெறும்போது மழை குறுக்கீடு செய்து இடைவிடாமல் மழை பெய்தால், விட்ட இடத்திலிருந்து திங்கள்கிழமை ஆட்டம் மீண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் ஆரம்ப ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அரை சதம் பதிவு செய்தார்.
விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கிறார். முகமது ஹாரிஸ், ஷான் மசூத் ஆகிய ஆட்டக்காரர்களும், நஸீம் ஷா, ஹாரிஸ் ரெளஃப், ஷஹீன் அஃப்ரிடி ஆகிய பந்துவீச்சாளர்களும் பாகிஸ்தானுக்கு பலம்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்தியாவை அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கம்பீரமாக பைனலுக்குள் நுழைந்துள்ளது.
கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஜாஸ் பட்லர் , அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
இதனால், இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எந்த அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.