டி-20 உலகக்கோப்பை தொடரின் முக்கியமான போட்டி. உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த போட்டி. கடந்த 29 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டிகளில் வெற்றிகளை மட்டுமே குவித்து வந்த இந்திய அணிக்கு ஏமாற்றம் ஒரு புறம். இன்னொரு புறம், பாகிஸ்தானுக்கு இது வரலாற்று வெற்றி. போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கோலி, ”வெளியே இருப்பவர்கள் எதையோ கற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். களத்திற்கு வந்து விளையாடி பார்த்தால் புரியும்” என பேசி இருப்பார். உண்மைதான், சமூகவலைதள களம் வேறு, கிரிக்கெட் தளம் வேறு என்பதை போட்டி முடிந்த அடுத்த சில நிமிடங்களில் நமக்கு புரிந்திருக்கும்.
உண்மையில், நேற்றைய போட்டி முடிவு இந்திய ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்திருக்க வேண்டியது. ஆனால், பாகிஸ்தான் வென்றதை கொண்டாடினர், கிரிக்கெட்டை, விளையாட்டை மதித்தனர். பாகிஸ்தான் வென்றது பிடித்திருந்தற்கான காரணம், இந்திய அணியும் எதையும் விட்டுக்கொடுக்கவில்லை, பாகிஸ்தானும் எளிதாக வென்றுவிடவில்லை. கிரிக்கெட்டைப் பார்க்க முடிந்தது, போராட்டத்தை பார்க்க முடிந்தது. கடைசியில், சிறப்பாக விளையாடிய அணி வெற்றியைத் தட்டிச் சென்றது.
போட்டிக்கு பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர், ஆனால் பெரிதாக கொண்டாடவில்லை. இந்த வெற்றி அவர்களுக்கானதே என்று நினைக்கும் வகையில் விளையாடி இருந்ததால், கேப்டன் கோலியும் போட்டி முடிந்த பிறகு ஓப்பனர்கள் பாபர் அசாம், ரிஸ்வானை பாராட்டி அவர்களிடன் கை குலுக்கினார். இன்னும் ஒரு படி மேலே சென்று, ரிஸ்வானை கட்டியணைத்து, தலையில் தட்டியும் பாராட்டி கொடுத்தார் கேப்டன் கோலி. போட்டி முடிந்து, போஸ்ட் மேட்ச் ப்ரசண்டேஷன் முடிந்த பிறகும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தோனியிடம் உரையாடி கொண்டிருந்தனர். வழக்கம் போல தோனியைச் சுற்றி வீரர்கள் நின்றிருந்த தருணம் விளையாட்டில் 'Spirit of Cricket' இருந்ததை உறுதிப்படுத்தியது. இரு நாட்டு வீரர்களின் ஸ்ப்ரிட் ஆஃப் கிரிக்கெட், ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கியது, பாடமாக அமைந்தது. வெற்றி. தோல்வி இரண்டும் விளையாட்டில் சகஜம் என்பதை உணர்த்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்