உலககோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு முதல் ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. ரோகித் சர்மா ஷாகின்ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரிலே எல்.பி.டபுள்யூ ஆனார். மூன்றாவது ஓவரில் கே.எல்.ராகுலும் ஷாகின்ஷா பந்தில் போல்டானார். இதனால், இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 11 ரன்களில் வெளியேறினார். அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நெருக்கடியான நேரத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினார். ரிஷப்பண்ட் ஹசன் அலி வீசிய 12வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். விராட்கோலி-ரிஷப்பண்ட் பார்ட்னர்ஷிப் 38 பந்தில் 50 ரன்களையும் எட்டியது. ரிஷப்பண்ட் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஜடேஜாவும், விராட்கோலியும் நிதானமாக ஆடினர். இதனால், 15 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது.
கடைசி 5 ஓவர்களில் இந்திய வீரர்கள் அதிரடியில் இறங்கினர். 18வது ஓவரில் மட்டும் இந்தியா 13 ரன்களை எடுத்தது. நெருக்கடியான நேரத்தில் பொறுப்புடன் ஆடிய விராட்கோலி 45 பந்தில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்களை அடித்தார். ஜடேஜா 13 ரன்களில் வெளியேற, சிறப்பாக ஆடிய விராட்கோலி 49 பந்தில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் குவித்துள்ளது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் பவுண்டரி, சிக்ஸரை முதல் ஓவரிலே அடித்தார். பாகிஸ்தான் அணி பவர்ப்ளே முடிவில் 43 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்தது. பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானும், பாபர் அசாம் இணையை பிரிக்க விராட்கோலி இந்திய பந்துவீச்சாளர்களை மாறி, மாறி பயன்படுத்தினர். 10 ஓவர்கில் பாகிஸ்தான் அணி 71 ரன்களை எட்டியது.
சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 40 பந்தில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் அரைசதம் அடித்தார். மறுமுனையில் முகமது ரிஸ்வானும் 41 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்ஸருடன் அரைசதம் கடந்தார். கடைசி 3 ஓவர்களில் 17 ரன்கள் பாகிஸ்தானின் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால், ஷமி வீசிய 18வது ஓவரின் முதல் பந்திலே ரிஸ்வான் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தையும் ரிஸ்வான் பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால், பாகிஸ்தான் வெற்றிக்கு 15 பந்தில் 3 ரன்களே தேவைப்பட்டது. பாகிஸ்தான் அணி முகமது ஷமியின் ஓவரிலே வெற்றி பெற்றது. இதன்மூலம் உலககோப்பை வரலாற்றில் இந்தியாவை வென்றதே இல்லை என்ற கரும்புள்ளிக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது. கேப்டன் பாபர் அசாம் 52 பந்தில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 68 ரன்களுடனும், ரிஸ்வான் 55 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸருடன் 79 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்