நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையோடு டி20 போட்டிகளில் இருந்து பிராவோ ஓய்வு பெற உள்ளதாக பிராவோ முன்னரே தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் நேற்று நடந்த, இலங்கையுடனான ஆட்டத்துக்குப் பிறகு தனது ஓய்வை பிராவோ அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவைன் பிராவோ கூறும்போது, “நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். எனது விளையாட்டு வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், எனது விளையாட்டு வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. கரீபியன் மக்கள் சார்பில் நாட்டுக்காக விளையாடியதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது நாங்கள் எதிர்பார்த்த உலகக் கோப்பை அல்ல, வீரர்களாகிய நாங்கள் விரும்பிய உலகக் கோப்பை அல்ல. இது கடினமான போட்டி. ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியுடன் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” என்று தெரிவித்தார்.
தேவையான நேரத்தில் ஆல்ரவுண்டர் அவதாரம் எடுக்கும் பிராவோ மே.இ.தீவுகள் அணியின் மிகப்பெரிய பலமாக இருந்தார். மே.இ.தீவுகள் 2012 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றிய அணியில் இடம் பெற்றிருந்த பிராவோ அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். தற்போது டுவைன் பிராவோ தனது அடுத்த இலக்கு பாலிவுட்டில் நுழைவதாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “வாய்ப்பு வந்தால் ஏன் வரக்கூடாது? நடிக்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்ல மாட்டேன். நான் வித்தியாசமான விஷயங்களைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது எனக்கு சவாலாக உள்ளது. அதை நான் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்,” என்று கூறினார்.
டுவைன் பிராவோ பாலிவுட்டில் நுழைவதற்கு காரணத்தை கூறும்போது, “எனது நாட்டிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்க விரும்புகிறேன். என் நாட்டில் (டிரினிடாட்) எத்தனையோ கலைஞர்கள் இருக்கிறார்கள். இங்கு வந்து வேலை செய்யும் வாய்ப்பை விரும்புவார்கள். ஒரே மாதிரியான கலாச்சாரத்தைக் கொண்ட இரு நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கும் ஒரு கப்பலாக நான் என்னைப் பார்க்கிறேன்." எனறு கூறிய டுவைன் பிராவோ தனது ஆல் டைம் ஃபேவரைட் ஷாருக்கான் என்றும், அவருடன் ஒரு நாள் கண்டிப்பாக பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார். அவர் வைத்த அடுத்த பெயர் ரன்வீர் சிங். அவரைப் பற்றி டுவைன் பேசுகையில், “நான் அவருடைய தீவிர ரசிகன். எனக்கு நினைவிருக்கிறது, சில ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஐபிஎல்லில் தொடக்க விழாவில் நடனம் ஆட வேண்டும் என்பதற்காக அவர் ஒத்திகை செய்துகொண்டிருக்கும்போது, என்னைப் பார்த்ததும், ஒத்திகையை நிறுத்தி, என்னிடம் வந்து வணக்கம் சொல்லி என்னுடன் இணைந்து சாம்பியன் டான்ஸ் ஆடி காண்பித்தார்" என்று பிராவோ மேலும் கூறினார்.