உலககோப்பை டி20 கோப்பையை கைப்பற்றப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போவது யார்? என்பதற்கான இரண்டாவது அரையிறுதி அடிலெய்டு மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


இதையடுத்து, இந்திய அணியின் பேட்டிங்கை கே.எல்.ராகுல் – ரோகித்சர்மா தொடங்கினர். ஸ்டோக்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலே கே.எல்.ராகுல் பவுண்டரி அடித்தார். ஆனால், அவர் 5 ரன்களில் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து, கேப்டன் ரோகித்சர்மாவுடன் விராட்கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினர். ரோகித்சர்மா இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார்.




இருப்பினும் 4 பவுண்டரிகளை விளாசிய அவர் கிறிஸ் ஜோர்டன் வீசிய 9வது ஓவரில் அவுட்டானார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, சூர்யகுமார் யாதவ் – விராட்கோலி ஜோடி சேர்ந்தனர். விராட்கோலி நிதானமாக ஆட சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடத் தொடங்கினார்.


ஆனால், அவரது அதிரடி தொடரும் முன்னரே 1 பந்து 1 சிக்ஸருடன் 14 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர், ஹர்திக்பாண்ட்யா – விராட்கோலி ஜோடி சேர்ந்தனர். இந்திய அணி 100 ரன்களை கடந்த பிறகு, விராட்கோலி – பாண்ட்யா ஜோடி அதிரயாக ஆடத்தொடங்கினர். விராட்கோலி 42 ரன்களை எட்டியபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்தார்.




பின்னர், கிறிஸ் ஜோர்டன் வீசிய பந்தில் ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடி வந்த விராட்கோலி அரைசதம் விளாசினார். அவர் 40 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 ரன்களை விளாசினார். பவுண்டரி அடித்த அடுத்த பந்திலே ஆட்டமிழந்தார். பின்னர், வந்த ரிஷப்பண்ட் – ஹர்திக் ஜோடி அதிரடியாக ஆடியது.


சிறப்பாக ஆடிய ஹர்திக்பாண்ட்யா 29 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடக்கத்தில் இந்திய அணி நிதானமாக ஆடினாலும், கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடியதால் இந்திய அணி 168 ரன்களை விளாசியது. கடைசி பந்தில் ஹர்திக் பவுண்டரிக்கு விரட்டினாலும், அந்த பந்தில் அவர் ஸ்டம்பை மிதித்துவிட்டதால் அந்த ரன் இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. கிறிஸ் ஜோர்டன் ஓவரில் 43 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ், ரஷீத் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.