சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டியிலும் அசத்தும் பேட்ஸ்மேனாக விளங்குபவர் விராட்கோலி. ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை தொடரிலும் இந்திய அணிக்காக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடிலெய்டில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.




விராட்கோலி இந்த போட்டியில் 42 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது, சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற அரிய சாதனையை படைத்தார். ஆசிய கோப்பைக்கு பிறகு பேட்டிங்கில் அசத்தி வரும் விராட்கோலி இன்றைய போட்டியிலும் அரைசதம் விளாசினார். இன்றைய அரைசதம் மூலம் விராட்கோலி சர்வதேச டி20 போட்டியில் 37வது அரைசதத்தை எட்டினார்.


விராட்கோலி மேலும் டி20 உலககோப்பைத் தொடரில் மட்டும் 100 பவுண்டரிகளை கடந்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். டி20 உலககோப்பையில் 100 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய வீரர் விராட்கோலி என்பது குறிப்பிடத்தக்கது. விராட்கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 115 போட்டிகளில் 107 இன்னிங்சில் ஆடி 1 சதம் 37 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 8 ரன்களை விளாசினார்.




262 ஒருநாள் போட்டிகளில் ஆடி 43 சதங்கள், 64 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 344 ரன்கள் விளாசியுள்ளார். 102 டெஸ்ட் போட்டியில் ஆடி 7 சதங்கள், 28 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 74 ரன்களை விளாசியுள்ளார். மேலும், டி20 உலககோப்பையில் அதிக ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்த மஹிலா ஜெயவர்த்தனேவிடம் இருந்து அந்த சாதனையை தட்டிப்பறித்தார்.