டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணி மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இனி வரும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் இந்திய அணி நாக் அவுட் செல்லும் வாய்ப்பு சற்று குறைவு தான். இந்தச் சூழலில் இன்று இந்திய அணி சுழல் பலம் வாய்ந்த ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.


இந்நிலையில் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆஃப்கானிஸ்தானின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். முதல் 5 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.




10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் அரைசதம் கடந்து அசத்தினார். அத்துடன் முதல் விக்கெட்டிற்கு ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களுக்கு மேல் அடித்தது. டி20 போட்டிகளில் இந்த ஜோடி 4ஆவது முறையாக 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. ரோகித் சர்மாவை தொடர்ந்து கே.எல்.ராகுலும் 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உதவியுடன் அரைசதம் கடந்து அசத்தினார். இந்திய அணி 13 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்தது. 


அதன்பின்னரும் இருவரும் அதிரடியை தொடர்ந்தனர். ஆட்டத்தின் 14ஆவது ஓவரில் சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா 47 பந்துகளில் 8பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உதவியுடன் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 15 ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அத்துடன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா சார்பில் முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையை பெற்றது. இதற்கு முன்பாக சேவாக்-காம்பீர் ஜோடி 136 ரன்கள் சேர்த்திருந்தது. அதை ரோகித்-ராகுல் ஜோடி முறியடித்துள்ளது. இறுதியி் 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை பெற்றது இந்திய அணி. 


 






ஆட்டத்தின் 17ஆவது ஓவரில் 48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்திருந்த போது கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. கடைசி வரை ஹர்திக் பாண்டியா(35*),ரிஷப் பண்ட் (27*) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


மேலும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரானார் ராகுல் டிராவிட்! பிசிசிஐ அறிவிப்பு!