ICC World Cup Qualifier 2023: இந்தியாவில் இந்தாண்டில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  


வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உலக்கோப்பைத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், தெனாப்ரிக்கா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் ஏற்கனவே நேரடியாக தகுதி பெற்றுவிட்டது. மொத்தம் 10 அணிகள் கலந்துகொள்ளவுள்ள இந்த தொடருக்கான இரு அணிகள் எது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 


இரண்டு இடத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, மேற்கு இந்திய தீவுகள், நேபால், அமெரிக்கா, இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள் என மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்ட இந்த 10 அணிகளும் லீக் போட்டியில் விளையாடி புள்ளிப்பட்டியலின் அடிப்படையில், சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறி விளையாடி வருகின்றன. சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ள 6 அணிகளில் ஒரு அணிக்கு ஒரு வீரர் வீதம் மொத்தம் 6 வீரர்களை ஐசிசி தேர்வு செய்து, அவர்களை மிகச் சிறந்த வீரர்கள் என பட்டியலிட்டுள்ளது. 


சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு, ஜிம்பாப்வே, இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் நாடுகள் முன்னேறியுள்ளது. இந்த சூப்பர் சிக்ஸ் சுற்றில் இருந்து இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதுடன் உலக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படும். 


இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள சிறந்த 6 வீரர்கள் பட்டியல் உலக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், இலங்கை அணியில் இருந்து ஹசரங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான அவர் லீக் சுற்றில் 18 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஜிம்பாப்வே அணி சார்பில் ஷிகந்தர் ரசா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நேபால் அணிக்கு எதிரான் போட்டியில் 54 பந்தில் 102 ரன்கள் விளாசியிருந்தார். 


அதேபோல், மேற்கு இந்திய தீவுகள் அணியின் சார்பாக, அந்த அணியின் அதிரடி ஆட்டக்கார் மற்றும் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இதுவரை 296 ரன்கள் விளாசியுள்ளார். ஸ்காட்லாந்து அணி சார்பில் ரிச்சி பெர்ரிங்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இதுவரை 207 ரன்கள் சேர்த்துள்ளார். ஓமன் அணி சார்பில் பிலால் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்து வீச்சாளரான இவர் ஓமன் அணிக்காக 9 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். நெதர்லாந்து அணியின் சார்பில் லோகன் வன் பீக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டரான இவர் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், சூப்பர் ஓவரில் பேட்டிங்கில் 30 ரன்கள் குவித்து, பவுலிங்கில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தி போட்டியை இறுதியில் ஒன் மேன் ஷோவாக மாற்றினார்.