Ashes Test 2023: ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.  


ஆஸ்திரேலிய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் சேர்த்திருந்தது. 


நேற்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில், களத்தில் நிலையாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் தனது சதத்தினை பூர்த்தி செய்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணி அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தாலும், ரன் குவிப்பில் வீரர்கள் கவனம் செலுத்தினர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் குவித்து வலுவான முதல் இன்னிங்ஸை படைத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்மித் 110 ரன்களும், ஹெட் 77 ரன்களும், வாரனர் 66 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணி சார்பில், ராபின்சன் மற்றும் ஜோஷ் டங் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர். 


அதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, சிறப்பான தொடக்கத்தை தொடக்க வீரர்களான பென் டக்கட் மற்றும் ஜாக் கார்வ்லே கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். கார்வ்லே 48 ரன்கள் எடுத்து 2 ரன்னில் தனது அரைசத்தினை தவறவிட்டார். அதன் பின்னர், களமிறங்கிய போப் சிறப்பாக ஆடினார். இதனால் இங்கிலாந்து அணி வலுவான நிலைக்குச் சென்றது. இரண்டாவது விக்கெட்டை 188 ரன்களில் இழக்க, சதம் எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட பென் டெக்கெட்டும் சிறுது நேரத்தில் 98 ரன்கள் குவித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 10 ரன்களின் தனது விக்கெட்டை ஸ்டார்க் பந்து வீச்சில் இழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். 


அதன் பின்னர் இணைந்த ஹாரி ப்ரூக் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆட, ஹாரி ப்ரூக் அதிரடி காட்டி வருகிறார். இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் சேர்த்துள்ளது.  இந்நிலையில் இங்கிலாந்து அணி 138 ரன்கள் பின் தங்கியுள்ளது. களத்தில் பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  இரண்டாவது நாளில் மட்டும் இரு அணிகளும் 9 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்களை சேர்த்துள்ளது. மைதானம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு என இரண்டிற்கும் ஏதுவாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.