ஆசியக் கோப்பை 2023 தொடருக்கு பிறகு இந்தாண்டு இறுதியில், இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடர் நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் ஐசிசிக்கு புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. 


அதில், தற்போது ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுடனான பயிற்சி போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதாகவும், ஒருநாள் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில்  ஆசிய அல்லாத அணியுடன் தனது பயிற்சியை விளையாட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. 


 ஆசிய கோப்பை 2023 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஒருநாள் உலகக் கோப்பையில் ஆசியாவிற்கு வெளியே உள்ள அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாட விரும்புகிறோம் என்றும், இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


இடத்தை மாற்ற சொன்ன பாகிஸ்தான் : 


முன்னதாக, ஐசிசி அனுப்பிய வரைவு அட்டவணையில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்திருந்தது. வரைவு அட்டவணையின்படி, பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவிலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையிலும் விளையாட வேண்டும்.


ஆனால், இந்த இரண்டு அணிகளுக்கு எதிராகவும் இந்த மைதானங்களில் விளையாட விருப்பம் இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு கடிதம் எழுதி இருந்தது. இதன் காரணமாக போட்டிக்கான அட்டவணையை வெளியிட ஐசிசி  தாமதம் செய்து வருகிறது. 


ஒருநாள் உலகக்கோப்பைக்கு தகுதிபெற்றுள்ள அணிகள்: 


ஒருநாள் உலகக்கோப்பைக்கு இதுவரை, இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நேபாளம், அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் தகுதிசுற்றில் மோதி மீதமுள்ள A2 மற்றும் A3 இடங்களை நிரப்பி உலகக் கோப்பை தொடரில் நுழையும். 


எப்போது தொடங்கும் உலகக் கோப்பை..?


ஐசிசி உலகக் கோப்பை 2023 உத்தேச வரைவி அட்டவணை குறித்த ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை நடைபெறும் என்றும், முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. 


மேலும், இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்குகிறது என்றும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி அக்டோபர் 15ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.