இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியானது அக்டோபர் 5-ம் தேதி முதல் தொடங்குகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி மற்றும் பிசிசிஐ இணைந்து வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியா வருவது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. உலகக் கோப்பையில் பங்கேற்க இந்தியா வர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அதன் அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும், இது தொடர்பாக (நாளை) ஆகஸ்ட் 3ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் தலைமையில் இறுதி முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.
முன்னதாக, பிலாவல் பூட்டோ தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை பாகிஸ்தான் அரசு அமைத்தது. அதில், இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை நடைபெறும் இடங்களுக்கு தனது குழுவை அனுப்பலாமா வேண்டாமா என்பது குறித்து அறிக்கை தயார் செய்ய சொல்லியிருந்தது. தற்போது ஆகஸ்ட் 3ம் தேதி இதுகுறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். பாதுகாப்பு குழுவை அனுப்ப இந்த குழு சார்பில் கோரிக்கை வைக்கலாம். அதனால் உலகக் கோப்பையின் போது பாகிஸ்தான் அணிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மறுபரிசீலனை செய்யலாம் என்ன பிசிபி திட்டமிட்டுள்ளது.
உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து மூத்த பிசிபி அதிகாரி ஒருவர் கிரிக்பஸ்ஸுக்கு அளித்த அறிக்கையில், ”உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது குறித்து உயர்மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். விளையாட்டுத்துறை அமைச்சர் அஹ்சன் மஸாரி தவிர, வாரியத்தின் மற்றும் அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் இதில் ஈடுபடவுள்ளனர்.” என தெரிவித்தார்.
சென்னைக்கு வந்த பாகிஸ்தான் ஹாக்கி அணி:
ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னையில் நடைபெற உள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க பாகிஸ்தான் ஆண்கள் தேசிய ஹாக்கி அணிக்கு NOC (ஆட்சேபனை இல்லை) வழங்கப்பட்டது. கடந்த 28ம் தேதி பாகிஸ்தான் ஹாக்கி செயலாளர் ஹைதர் ஹூசைன் விளையாட்டு வாரியம் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து NOC பெற்று நேற்று பாகிஸ்தான் ஹாக்கி அணி சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மாற்றமா..?
வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ அட்டவணையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க சில போட்டிகளின் தேதியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. வருகின்ற அக்டோபர் 15-ஆம் தேதி இந்தியாவுடனான போட்டியும் இதில் அடங்கும், இந்த போட்டியானது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருநாள் முன்னதாக அதாவது அக்டோபர் 14-ஆம் தேதி விளையாடப்படலாம். இது தவிர அந்த அணியின் முதல் 2 போட்டிகளின் தேதியில் மாற்றம் இருக்கலாம். அட்டவணை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரமே வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் அட்டவணை:
போட்டிகள் | தேதி | இடம் |
பாகிஸ்தான் vs குவாலிஃபையர் 1 | அக்டோபர் 6 | ஹைதராபாத் |
பாகிஸ்தான் vs குவாலிஃபையர் 2 | அக்டோபர் 12 | ஹைதராபாத் |
பாகிஸ்தான் vs இந்தியா | அக்டோபர் 15 | அகமதாபாத் |
பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா | அக்டோபர் 20 | பெங்களூரு |
பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் | அக்டோபர் 23 | சென்னை |
பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா | அக்டோபர் 27 | சென்னை |
பாகிஸ்தான் vs வங்கதேசம் | அக்டோபர் 31 | கொல்கத்தா |
பாகிஸ்தான் vs நியூசிலாந்து | நவம்பர் 4 | பெங்களூரு |
பாகிஸ்தான் vs இங்கிலாந்து | நவம்பர் 12 | கொல்கத்தா |