இந்திய மண்ணில் நடைபெறும் இருதரப்பு தொடருக்கான டைட்டில் ஸ்பான்சராக இருக்க விரும்புகின்ற பிரபல நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களது டெண்டர்களை சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் உள்நாட்டு தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் தொடர்பான டெண்டர்களை வெளியிட்டுள்ளது. உள்நாட்டு தொடரில் பிசிசிஐ-யிடம் இருந்து டைட்டில் ஸ்பான்சர் உரிமையை பெறுவதற்கான டெண்டர் நடைமுறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இதுகுறித்த அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டது. அதன்படி,”மாஸ்டர்கார்டு 2022-23 உள்நாட்டுப் பருவத்திற்கான தலைப்பு ஸ்பான்சர் உரிமையைப் பெற்றிருந்தது. இவர்களின் டைட்டில் ஸ்பான்சர் காலாவதியாகிய நிலையில், அவர்கள் தங்களது உரிமையை நீட்டித்துக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இந்தநிலையில், நிறுவனங்களுக்கு பிசிசிஐ சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ வழங்கிய டெண்டரில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, ”டெண்டரைச் சமர்ப்பிக்கும் முன், ஆர்வமுள்ள நிறுவனங்கள், டைட்டில் ஸ்பான்சரின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் விண்ணப்பப் படிவத்தை சேகரிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பெற இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ரூ.1 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டியும் செலுத்த வேண்டும். இது தவிர, இந்தக் கட்டணமும் திரும்பப் பெறப்படாது.” என தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக அடிடாஸுடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்தது. அதனை தொடர்ந்தே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. அதேபோல், கடந்த மாதத்தில் இருந்து டீம் இந்தியாவின் ஜெர்சியின் முன்னணி ஸ்பான்சராக ட்ரீம்11 உடன் பிசிசிஐ இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் உள்நாட்டு தொடர்களில் பிஸியாக இருக்க இருக்கும் இந்திய அணி:
இந்திய கிரிக்கெட் அணி வரும் உள்நாட்டு சீசனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட உள்ளது. இதில், உலகக் கோப்பைக்கு முன்னதாக செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இதையடுத்து இந்திய அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. அதன் பிறகு சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது தவிர, இந்த காலகட்டத்தில் உள்நாட்டு சீசனும் விளையாடப்படும்.
கடந்த வாரம், பிசிசிஐ 2023-24 ஆம் ஆண்டில் 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 8 டி20ஐ உள்ளடக்கிய மொத்தம் 16 சர்வதேச போட்டிகளுடன் இந்தியாவின் சொந்த சீசனுக்கான அட்டவணையை அறிவித்தது.
ஃபேன்டஸி கேமிங் தளமான ட்ரீம்11 இந்த ஆண்டு ஜூன் மாதம் 358 கோடி ரூபாய்க்கு பிசிசிஐயின் முன்னணி ஸ்பான்சர் உரிமையை வென்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பிசிசிஐ அனைத்து பிசிசிஐ சர்வதேச மற்றும் உள்நாட்டு உள்நாட்டு போட்டிகளுக்கான தலைப்பு ஸ்பான்சர்ஷிப் உரிமையை மாஸ்டர்கார்டு வாங்கியதாக அறிவித்தது.