2022ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. 4 வீரர்களின் பெயரை பரிந்துரை செய்துள்ளது. இதில், இந்திய வீரர் ஒருவரின் பெயரும் இடம்பிடித்துள்ளார்.
வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இந்த ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 இளம் வீரர்களின் வீரர்களை அறிவித்துள்ளது. இந்த பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை அர்ஷ்தீப் சிங்தான். இந்த விருதுக்கு இரண்டு இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு தொடக்க வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி, இந்த பட்டியலில் அர்ஷ்தீப் சிங், தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன், நியூசிலாந்தின் ஃபின் ஆலன் மற்றும் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விருதுக்கான வாக்கெடுப்பு ஜனவரி மாதம் தொடங்கும் என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஷ்தீப் சிங்:
கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான அர்ஷ்தீப் சிங், இந்தாண்டு 33 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். அதை தொடர்ந்து நியூசிலாந்து எதிரான ஒருநாள் தொடரிலும் அறிமுகம் செய்யப்பட்டார்.
டெத் ஓவர்களில் குறைந்தது இரண்டு ஓவர்களை வீசி சராசரியாக 18.12 ஆகவும், 8.17 என்ற எகானமி ரேட்டுடன் இருக்கிறார். அதேபோல், ஐபிஎல் 2021 மற்றும் 2022 தொடர்களில் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். அதன் காரணமாகவே, அர்ஷ்தீப் சிங் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்கி, அதிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
ஃபின் ஆலன்:
நியூசிலாந்தின் ஆலன் டி20 போட்டிகளில் 21.63 சராசரியிலும் 155.09 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 411 ரன்களும், ஒருநாள் போட்டியில், 38.70 சராசரியிலும் 94.39 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 387 ரன்களும் எடுத்துள்ளார்.
மார்ட்டின் கப்திலுக்கு பதிலாக ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக தொடக்க வீரராக களமிறங்கிய பின் ஆலன் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
மார்கோ ஜான்சன்:
தென்னாப்பிரிக்கா அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் 36 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி 22.90 சராசரியில் 229 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரண்டு விக்கெட்டுகளையும், டி20யில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் கைல் வெர்ரேய்னுடன் 100 பார்ட்னர்ஷிப் அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்ராஹிம் சத்ரான்:
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்கு பயணம் செய்த வீரரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை அவர் குவித்தார். அவர் இலங்கைக்கு எதிராக 162 ரன்கள் குவித்து கவுதம் கம்பீரின் சாதனையை முறியடித்தார். ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர் அடித்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோரையும் சத்ரான் பதிவு செய்தார்.
இரண்டு பார்மேட்டிலும் 3 சதங்கள் உள்பட ஒருநாள் போட்டிகளில் 431 ரன்களும், 20 ஓவர் போட்டிகளில் 367 ரன்களும் அடித்துள்ளார்.