2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஒருநாள் போட்டிக்கான ஆண்கள் அணியில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் முகமது சிரஜ் ஆகிய இரண்டு பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.
2022ம் ஆண்டுக்கான சிறந்த ஒடிஐ அணி:
2022ஆம் ஆண்டுக்கான ஒடிஐ அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஓவ்வொரு ஆண்டும் மிகச்சிறப்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுத்து ஐசிசி அந்த ஆண்டுக்கான அணி என வெளியிடும். இதில் மிகச்சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய வீரர்கள் இடம் பெறுவர். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், இந்திய அணியின் நடுக்கள வீரரான ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் ஐசிசியின் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
ஐசிசி வெளியிட்டுள்ள அணி விவரம்:
ஐசிசியின் அணிக்கு பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் கேப்டனாக தேர்வாகியுள்ளார். அதோடு, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், மேற்கிந்திய தீவுகள் அணியின் சாய் ஹோப், இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர், நியூசிலாந்து அணியின் டாம் லாதம், மற்றும் ஜிம்பாபே அணியின் சிகந்தர் ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதோடு, வங்கதேச அணியின் மெஹிதி ஹாசன் மிராஸ், மேற்கிந்திய தீவுகளின் அல்ஜாரி ஜோசப், இந்திய அணியின் முகமது சிராஜ், நியூசிலாந்து அணியின் டிரெண்ட் போல்ட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஜாம்பா ஆகியோர் ஐசிசியின் ஒடிஐ அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
ஸ்ரேயாஸ் அய்யர்:
இந்திய அணிக்காக மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர், கடந்தாண்டில் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவித்தார். 2022ம் ஆண்டு 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், ஒரு சதம், 6 அரைசதங்கள், 2 முறை 30+ ரன்கள், 3 முறை 20+ ரன்கள் என 724 ரன்களை குவித்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 113 ரன்கள் ஆகும். கடந்த ஆண்டில் இந்திய அணிக்காக, அதிக ரன்களை குவித்த வீரரும் ஸ்ரேயாஸ் அய்யர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமது சிராஜ்:
இந்திய அணியில் பும்ராவின் வெற்றிடத்தை சிராஜ் சிறப்பாக நிரப்பி வருகிறார் என்றே கூற வேண்டும். சமீபத்தில் நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சிராஜ் இந்திய அணியின் பந்துவீச்சில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். கடந்த ஆண்டில் இந்திய அணிக்காக 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சிராஜ், 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 12 மெய்டன் ஓவர்களை வீசிய சிராஜ், அதிகபட்சமாக 3 ஒருநாள் போட்டிகளில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.