2022ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான ஒளிபரப்பு ஏற்பாடுகளின் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13 வரை இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின்போது நிபுணத்துவ கருத்தை வழங்கும் நட்சத்திர வர்ணனையாளர்கள் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தாண்டுக்கான ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளின் நேரடி ஒளிபரப்பையும், உலகம் முழுவதும் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத்தையும் ஐசிசி டிவி வழங்க உள்ளது. போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சி, இன்னிங்ஸ் நடுவே ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி, போட்டிக்கு பிந்தைய நிகழ்ச்சி இதில் அடங்கும்.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போட்டியை ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக கொண்டு சேர்க்க இருக்கிறது நட்சத்திர வர்ணனையாளர்கள் குழு.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன், வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.
மேலும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் உலகக் கோப்பை சாம்பியன்களான ஆடம் கில்கிறிஸ்ட், மெல் ஜோன்ஸ், ஷேன் வாட்சன் மற்றும் மைக்கேல் கிளார்க் உள்ளிட்ட பிற நட்சத்திரகளுடன் இணைந்து மார்கன் வர்ணனை கொடுக்க உள்ளார்.
இவர்களுடன் முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள், நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் அதர்டன், முன்னாள் இந்திய பயிற்சியாளர் மற்றும் ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற ரவி சாஸ்திரி மற்றும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை வென்ற இசா குஹா ஆகியோர் இணைந்துள்ளனர்.
ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்ற கார்லோஸ் பிராத்வைட் மற்றும் சாமுவேல் பத்ரீ, ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற ஷான் பொல்லாக் மற்றும் சுனில் கவாஸ்கர் மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஆகியோரும் நட்சத்திர வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கூடுதலாக, அனுபவமிக்க வர்ணனையாளர்களான ஹர்ஷா போக்லே, இயன் ஸ்மித், பாசித் கான், நடாலி ஜெர்மானோஸ், மார்க் ஹோவர்ட், இயன் பிஷப், அதர் அலி கான், சைமன் டவுல், ரஸ்ஸல் அர்னால்ட், டேனி மோரிசன் மற்றும் ம்புமெலெலோ ம்பாங்வா இணைந்துள்ளனர். போட்டியின் முதல் சுற்றில் பிரையன் முர்கட்ராய்ட், டிர்க் நானெஸ், நியால் ஓ பிரையன் மற்றும் பிரஸ்டன் மாம்சென் ஆகியோர் வர்ணனை கொடுக்க உள்ளனர்.