இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மைதானங்களில் 13வது உலகக் கோப்பைத் தொடர் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ள இந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 


இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இன்று அதாவது அக்டோபர் 13ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதிக்கொண்டன. இந்த தொடரில் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்காமல் இருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இன்று களமிறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற அவர் முதலில் நியூசிலாந்து அணி பந்து வீசும் என முடிவு செய்தார். 


முதலில் களமிறங்கிய வங்காள தேச அணி, நியூசிலாந்து அணிக்கு தாக்கு பிடிக்க முடியவில்லை என்றாலும் ஓரளவிற்கு சவால் அளிக்கும் ஆட்டத்தினை ஆடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டியின் முதல் பந்திலேயே வங்காள அணியின் லிட்டன் தாஸ் தனது விக்கெட்டினை இழந்தார். வங்காள அணி 56 ரன்களை எட்டுவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 


அதன் பின்னர் கைகோர்த்த கேப்டன் ஷகிப் அல்-ஹசன் மற்றும் முஸ்தஃபிகுர் ரஹிம் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. இவர்கள் இருவரும் இணைந்து 108 பந்துகளில் 96 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர். சிறப்பாக ஆடி வந்த ஷகிப் 51 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்கள் சேர்த்திருந்தார். அரைசதம் கடந்திருந்த முஸ்தஃபிகுரும் தனது விக்கெட்டினை 66 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார். இவர் 75 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் விளாசி இருந்தார். 


முஸ்தஃபிகுர் தனது விக்கெட்டினை இழந்தபோது வங்காள அணியின் ஸ்கோர் 175 ரன்களாக இருந்தது. அதன் பின்னர் சீரனா இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வங்காள தேச அணி  200 ரன்களைக் கடந்தது. இறுதியில் வங்காள அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முஸ்தஃபிகுர் 66 ரன்களும், ஷகிப் அல்-ஹசன் 40 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் சிறப்பாக விளையாடிய மஹுமதுல்லா 41 ரன்கள் சேர்த்திருந்தார். 


அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது முதல் விக்கெட்டினை 12 ரன்களில் இழந்தது. ஆனால் அது அணியின் வெற்றிக்கு எந்தவகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளமான சென்னை மைதானத்தில் நியூசிலாந்து அணி நிதானமாகவே ரன்கள் சேர்த்தது. இறுதியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் சேர்த்து 8 விக்கெ வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


சிறப்பாக விளையாடிய  வில்லியம்சன் கையில் ஏற்பட்ட காயத்தால் வெளியேறினார். அதன் பின்னர் வந்த ப்ளிஸ் மற்றும் மிட்செல் அணியின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணமாக விளங்கினர். சிறப்பாக விளையாடிய மிட்செல் 90 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதல் இடத்துக்குச் சென்றுள்ளது.