அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் (Alastair Cook) அறிவித்துள்ளார். 


இது தொடர்பான அறிவிப்பை X-தளத்தில் (டிவிட்டர்) குக் வெளியிட்டுள்ளார். அவரின் பதிவில்,” அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வு பெறுகிறேன். கிரிக்கெட்டிற்கு குட்பை சொல்வது அவ்வளவு எளிதானது இல்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் என்பது என் வாழ்வில் மிக இன்றியமையாததாக இருந்தது.


நான் நினைத்துப் பார்க்காத இடங்களுக்கெல்லாம் கிரிக்கெட் என்னை அழைத்துச் சென்றிருக்கிறது. அதோடு, கிரிக்கெட் மூலம் வாழ்நாளுக்கான நட்பும் எனக்குக் கிடைத்து” என்று குறிப்பிட்டிருக்கிறார். 


2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த குக், 562 ஒருநாள், 20 ஓவர், டெஸ்ட் என மூன்று ரக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34,045 ரன், 88 சதம், 168 அரை சதம் அடித்துள்ளார்.


கிரிக்கெட்டிங் லெஜெண்ட் 


2018இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தபோது, டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 12 ஆயிரம் ரன் எடுத்திருந்தார் குக். 12 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் குக்கின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. Essex - க்ளப்காக மட்டும் குக் 11,337 ரன் எடுத்தார். 


2006இல் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது அணியில்  தொடக்க ஆட்டக்காரார களமிறங்க வேண்டிய வீரர் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். மார்ச் மாதத்தில் போட்டி நடந்ததால் வெயில் தாக்காம் அதிகமாக இருந்தது.


21 வயதில் அந்தத் தொடரில் அலிஸ்டர் குக்கை தேர்வு செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் குக் சிறப்பாக விளையாடினார். முதல் இன்னிங்சில் 60 ரன்கள் குவித்தார். ஹர்பஜன், கும்ப்ளே போன்ற சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடினார் குக்.


அன்று முதல் 12 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தில் அவரின் சாதனைகள் அபரிவிதமானது. நெருக்கடியான சூழலிலும் நிதானமான விளையாடியுள்ளார். அணியின் கேப்டனாகவும் மிகச் சிறப்பான பல்வேறு சூழல்களை கையாண்டிருக்கிறார்.


டெஸ்ட் போட்டியை பொருத்த வரை இதுவரை 161 போட்டிகளில் விளையாடி 12,472 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 33 சதங்களும், 57 அரை சதங்களும் அடங்கும். ஐந்து முறை 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 294 ரன்கள் எடுத்துள்ளார். அதுவும் இந்தியாவுக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு எடுத்தார். இந்தியாவுக்கு எதிராக ஆறு சதங்களை அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் இவரது சராசரி 45.4 ஆகும். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 59 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். அதில் 24-ல் வெற்றியும், 22-ல் தோல்வியும், 13 போட்டி டிராவில் முடிந்துள்ளது. இரண்டு முறை இவரது தலைமையில் ஆஷிஷ் தொடரை வென்று தந்துள்ளார்.