உலகக் கோப்பையின் 29வது ஆட்டம் இன்று லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.


இந்த இரு அணிகளும் இந்த உலகக் கோப்பையில் இதுவரை தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 5 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.


புள்ளிப்பட்டியலில் இந்தியா 2வது இடத்திலும், இங்கிலாந்து 10வது இடத்திலும் உள்ளன. இந்த போட்டியில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச தீர்மானித்தது. இங்கிலாந்து முடிவு சரியானது என்பது போல், கிறிஸ் வோக்ஸ் 9 ரன்களுக்கு சுப்மன் கில்லையும், ஷ்ரேயாஸ் ஐயரை 4 ரன்களிலும் பெவிலியனுக்கு அனுப்பினார். மறுமுனையில், போட்டியின் பொறுப்பை ஏற்ற பவுலர் டேவிட் வில்லி, விராட் கோலியை 0 ரன்னில் அவுட் செய்து பெவிலியனுக்கு அனுப்பினார். விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் சிறப்பான ஃபார்மில் காணப்பட்டார். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் கோலி 9 பந்துகளை சந்தித்து பூஜ்ஜியத்திற்கு அவுட் ஆன பிறகு, டீம் இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள கோலியின் ரசிகர்களும் வருத்தமடைந்தனர். 






விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர் ஏமாற்றம்: 






அதே ரசிகர்களில் ஒருவர் லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் இருந்தார். விராட் கோலி பேட்டிங்கைப் பார்ப்பதற்காக அமெரிக்காவிலிருந்து லக்னோவுக்கு வந்தார். ஆனால் போட்டி தொடங்கிய சில நிமிடங்களில், விராட் கோலி பெற்று பெவிலியன் திரும்பினார். அந்த விராட் கோலி ரசிகர் எவ்வளவு வலியை அனுபவித்திருப்பார் என்பதை இப்போது கற்பனை செய்து பாருங்கள். மைதானத்தில் இருந்த கேமராமேன் விராட்டின் ரசிகர் வைத்திருந்த போஸ்டரை நோக்கி தனது கேமராவைத் திருப்பினார். அதில் கிங் கோலியின் பேட்டிங்கைப் பார்க்க அமெரிக்காவிலிருந்து 7,732 மைல் தூரம் பயணித்துள்ளார் என்று எழுதப்பட்டிருந்தது.


இருப்பினும் இந்த உலகக் கோப்பையில் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாகவே இருந்தது. அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலி ஐந்தாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி இதுவரை 6 போட்டிகளில் 88.50 சராசரியில் 354 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இன்று விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.


இன்றைய இங்கிலாந்து போட்டிக்கு முன்பு 32 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 53.23 சராசரியில் 1384 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனது மூலம் இது ஒருநாள் போட்டிகளில் அவரது 16-வது டக் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக நான்காவது டக் ஆகும். கடந்த 2011ல் கொல்கத்தாவில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆனார். அதன் பின்னர் கடந்த 2013ல் தர்மசாலாவில் இரண்டாவது முறையாக டக்கில்ஆட்டமிழந்தார்.