ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி விளையாடிய மூன்று லீக் ஆட்டங்களில் பரிதாப தோல்வியை பெற்றுள்ளது.


அதன்படி, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தனது முதல் லீக் போட்டியை தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாடியது இலங்கை. அந்த போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்தது.


பின்னர், களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதேபோல், கடந்த 10 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 


இதனிடையே, நேற்று (அக்டோபர் 16) ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தது இலங்கை அணி. 


அரையிறுதியில் நுழையுமா இலங்கை:


இந்நிலையில், அரையிறுதி போட்டிக்கு இலங்கை அணி நுழையுமா என்ற கேள்வி எழுந்தது. அதன்படி, மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த இலங்கை அணி -1.532 ரன் ரேட்டுடன் 9 வது இடத்தில் இருக்கிறது. முன்னதாக பத்து அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தொடர் இது என்பதால் ஒவ்வொரு அணியும் தலா 9 போட்டிகளில் விளையாடும். அதில் அரையிறுத்திக்கு தகுதி பெற குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற்று ஆக வேண்டும்.


தற்போதைய நிலவரத்தின் படி, இலங்கை அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இருப்பதால், இனி வரும் 6  போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது. 


அடுத்த 6 போட்டிகள் யாருடன்?


இலங்கை அணி அடுத்ததாக  நெதர்லாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து  அணிகளுடன் விளையாட உள்ளது. இந்த அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்பதால் தங்களது முழு திறமையையும் இலங்கை அணி வெளிபடுத்தியே ஆக வேண்டும். 


அதேநேரம், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் முதல் இரண்டு இடத்தில் இருப்பதால் இந்த இரு அணிகளையும் வீழ்த்துவது இலங்கை அணிக்கு கொஞ்சம் சவாலாகத்தான் இருக்கும். அதேபோல், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் பந்தாடியது. எனவே இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் அணியும் பெரும் தலைவலியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Gurbaz: சதம் அடிக்காத விரக்தி! பேட்டால் நாற்காலியை தாக்கிய குர்பாஸ்... ஐசிசி எடுத்த அதிரடி நடவடிக்கை..!


மேலும் படிக்க: SA Vs NED Score LIVE: தொடர்ந்து தடுமாறும் நெதர்லாந்து... விக்கெட் வேட்டையில் தென்னாப்பிரிக்கா