கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


ஆப்கானிஸ்தான் வங்கதேசம் மோதல்:


இச்சூழலில், மூன்றாவது லீக் போட்டி ஹிமாச்சல் பிரதேசம், தர்மசாலா மைதனாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. முன்னதாக, டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி (37.2) ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, மொத்தம் 156 ரன்கள் எடுத்தது.


ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ்  மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய குர்பாஸ் அந்த அணியில் அதிகபட்சமாக 47 ரன்கள் எடுத்தார். பின்னர், களமிறங்கிய ரஹ்மத் ஷா, கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி இரட்டை இலக்க எண்களில் ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.


அபாரமாக பந்து வீசிய வங்கதேசம்:


அந்த அணியின் மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் அபாரமாக பந்து வீசினர். அதன்படி, அவர்கள் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷோரிஃபுல் இஸ்லாம் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.


அதிரடி காட்டிய  மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன்


157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில்  மெஹிதி ஹசன், நஜ்முல் ஹொசைன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினர். அதன்படி, மெஹிதி ஹசன் 57 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.  நஜ்முல் கடைசி வரை களத்தில் நின்று 59 ரன்கள் எடுத்து வங்கதேச அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். அதன்படி, 34.4 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 158 ரன்கள் எடுத்து  வெற்றி பெற்றது.


48 நாட்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த போட்டிகளின் 5 வது லீக் ஆட்டத்தில் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.


விறுவிறுப்பு:


முன்னதாக முதல் போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்குப் பழிதீர்த்துக் கொண்டது.


இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதன்படி , இந்த இரண்டு அணிகளும் புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது.