ஆசிய விளையாட்டுகள் 2023இல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்கள் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது மழை பெய்யவே, ஆட்டம் பாதியில் தடைபட்ட ஆட்டம், மழை நீண்ட நேரம் தொடரவே போட்டி முழுவதுமாக நிறுத்தப்பட்டது. 18.2 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது போட்டியின் இரண்டாவது ஓவரில் இருந்தே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்த ஆஃப்கானிஸ்தான். தொடக்க ஆட்டக்காரர்களில் ஜுபைத் அக்பரி இரண்டாவது ஓவரில் 5 ரன்கள் சேர்த்த நிலையிலும், முகமது ஷகாத் மூன்றாவது ஓவரில் 4 ரன்கள் சேர்த்த நிலையிலும் தங்களது விக்கெட்டினை இழந்தனர். 9 ரன்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த ஆஃப்கானிஸ்தானுக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. 4வது ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி 3வது விக்கெட்டை இழக்க, அப்போது அணியின் ஸ்கோர் 12 ரன்களாக இருந்தது.
அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்ததால், ஆஃப்கானிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் ஓரளவுக்கு இந்திய வேகத்துக்கு தாக்கு பிடிக்க முயற்சி செய்தது. அதாவது அதிரடியாக ரன்கள் குவிப்பதைவிட விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் இருக்க வேண்டும் என முடிவு செய்து விளையாடி வந்தனர். போட்டியின் 10வது ஓவரில் ஆஃப்கான் அணி தனது 4வது விக்கெட்டினை இழந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 49ஆக இருந்தது.
5வது விக்கெட்டும் அடுத்த 3 ரன்கள் சேர்த்த பின்னர் பறிகொடுத்த ஆஃப்கானிஸ்தான் அணியை ஓரளவுக்கு மீட்டு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர். ஆஃப்கான் அணியின் ஷாகிதுல்லா 43 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 49 ரன்களும், குல்பைதின் 24 பந்தில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர் உட்பட 27 ரன்கள் சேர்த்த நிலையில் விளையாடிக்கொண்டு இருந்த போது மழை பெய்யவே போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது ஆஃப்கானிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 112 ரன்கள் சேர்த்திருந்தது. நீண்ட நேரம் காத்திருந்த பின்னரும் மழை நிற்காததால் போட்டி முடிவு இல்லாமல் முடித்துக்கொள்ளப்பட்டது. இறுதில் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
ஏற்கனவே மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.