Champions Trophy: ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் உலகக்கோப்பைக்கு நிகரான தொடராக கருதப்படுவது சாம்பியன்ஸ் டிராபி. மினி உலகக்கோப்பை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்த கிரிக்கெட் தொடர் நாளை பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. 


1998ம் ஆண்டு முதல் நடக்கும் இந்த மினி உலகக்கோப்பையை இதுவரை வென்ற அணிகள் யார்? யார்? என்று கீழே விரிவாக காணலாம். 


1998ம் ஆண்டு - தென்னாப்பிரிக்கா


200ம் ஆண்டு - நியூசிலாந்து


2002ம் ஆண்டு - இந்தியா, இலங்கை


2004ம் ஆண்டு - வெஸ்ட் இண்டீஸ்


2006ம் ஆண்டு - ஆஸ்திரேலியா


2009ம் ஆண்டு - ஆஸ்திரேலியா


2013ம் ஆண்டு - இந்தியா


2017ம் ஆண்டு - பாகிஸ்தான்



முதல் சாம்பியன் தென்னாப்பிரிக்கா:


மினி உலகக்கோப்பையான இந்த சாம்பியன்ஸ் டிராபியை முதன் முதலில் வங்கதேசம் நாடு நடத்தியது. இதில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வேலஸ் சதம் அடிக்க அந்த அணி 245 ரன்களை எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்க அணிக்கு ரிண்டெல் 49 ரன் எடுத்து அவுட்டாக, காலீஸ் 37 ரன்கள் எடுக்க தனி ஆளாக போராடிய ஹான்ஸி குரோன்சே 77 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால், கிரிக்கெட் உலகின் அதிர்ஷ்டம் இல்லாத அணியாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்க மினி உலகக்கோப்பையை முதன்முறை வென்ற அணி என்ற பெருமையை படைத்தது. 


நியூசிலாந்து - 2000ம் ஆண்டு


இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கென்யாவில் நடந்தது. இந்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு இந்தியா - நியூசிலாந்து அணிகள் முன்னேறியது. முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு கங்குலி - சச்சின் மிரட்டல் தொடக்கம் அளித்தனர்.  இருவரும் இணைந்து அபாரமாக ஆடியபோது சச்சின் 69 ரன்னில் அவுட்டாக, மறுமுனையில் கங்குலி மிரட்டல் சதம் அடித்தார். கங்குலி 117 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 132 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழக்க கிரிஸ் கைம்ஸ் தனி ஆளாக சதம் அடித்து 2 பந்துகள் மீதம் வைத்து நியூசிலாந்துக்கு கோப்பையை வென்று தந்தார். 


இந்தியா, இலங்கை -2002ம் ஆண்டு


3வது சாம்பியன்ஸ் டிராபி இலங்கையில் நடந்தது. இதில் இறுதிப்போட்டி கொழும்புவில் நடந்தது. அந்த போட்டிக்கு இந்தியா - இலங்கை தகுதி பெற்றது. செப் 29ம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி ஜெயசூர்யா, சங்ககரா அரைசதத்தால் 244 ரன்களை எடுத்தது. 245 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால், அடுத்த நாள் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தநாள் புதியதாக தொடங்கிய போட்டியில் மீண்டும் முதலில் பேட் செய்த இலங்கை அணி ஜெயவர்தனேவின் 77 ரன்களுடன் 222 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி 38 ரன்களுக்கு 1 விக்கெட்டுடன் ஆடியபோது மீண்டும் மழை பெய்தது. இதையடுத்து, இந்தியா - இலங்கை இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டது. 


வெஸ்ட் இண்டீஸ் 2004:


2004ம் ஆண்டு நடந்த மினி உலகக்கோப்பைத் தொடர் இங்கிலாந்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணி ட்ரெஸ்கோதிக் சதத்துடன் 217 ரன்களை எடுத்தது. பின்னர் 218 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது சந்தர்பால் 47 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். 147 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இங்கிலாந்து வசம் வெற்றிச் சென்ற நிலையில், ப்ரவுண் - ப்ராட்ஷா இருவரும் இணைந்து இங்கிலாந்துக்கு அதி்ரச்சி தந்தனர். ப்ரவுண் 35 ரன்களும், ப்ராட்ஷா 34 ரன்களும் எடுக்க 7 பந்து மீதம் வைத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. 


ஆஸ்திரேலியா - 2006ம் ஆண்டு


2006ம் ஆண்டு மினி உலகக்கோப்பை இந்தியாவில் நடந்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாக ஆஸ்திரேலியா 28.1 ஓவர்களில் 116 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து ஆடியபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து, டி.ஆர்.எஸ். விதிப்படி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா முதன்முறையாக மினி உலகக்கோப்பையை வென்றது. 


ஆஸ்திரேலியா - 2009ம் ஆண்டு


2009ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தென்னாப்பிரிக்காவில் நடந்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதின. ப்ரெட் லீ, ஜான்சன், பீட்டர் சிடில் ஆகியோர் வேகத்திலும், நாதன் ஹாரிட்ஸ் சுழலிலும் நியூசிலாந்து அணி 200 ரன்கள் மட்டுமே எடுக்க, ஷேன் வாட்சன் சதம் அடிக்க கேமரூன் ஒயிட் 62 ரன்கள் எடுக்க 206 ரன்கள் எடுத்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. 


இந்தியா - 2013ம் ஆண்டு


2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இங்கிலாந்தில் நடந்தது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - இந்தியா மோதியது. மழை காரணமாக இறுதிப்போட்டி 20 ஓவராக மாற்றப்பட்டது. முதலில் ஆடிய இந்திய அணிக்காக தவான் 31 ரன்களும், விராட் கோலி 43 ரன்களும் எடுக்க கடைசியில் ஜடேஜா அதிரடியாக 33 ரன்கள் எடுக்க இந்திய அணி 129 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மோர்கன் 33 ரன்களும், ரவி போபரா 30 ரன்களும் எடுக்க கடைசியில் இங்கிலாந்து அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை 2வதுமுறையாக வென்றது.


பாகிஸ்தான் 2017


இங்கிலாந்தில் நடந்த சாம்பின்ஸ் டிராபியின் இறுதி ஆட்டத்திற்கு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. லண்டனில் நடந்த இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணிக்கு பகர்ஜமான் சதம் அடிக்க, ஹபீஸ் அதிரடியாக 57 ரன்கள் எடுக்க இந்தியாவிற்கு 339 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும். இந்திய அணிக்கு ரோகித், ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ், தோனி அடுத்தடுத்து அவுட்டாக 72 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா சிக்ஸரும் பவுண்டரியும் விளாசி ஆட்டத்தை மாற்றிக் கொண்டிருந்தார். ஆனால், பாண்ட்யா ரன் அவுட்டானார். அவர் 43 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 76 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இந்தியா 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு அவுட்டானது. பாகிஸ்தான் முதன்முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்றது.