சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கடைசி லீக் போட்டி நடந்தது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கத்தில் சுப்மன்கில், ரோகித் சர்மா, விராட் கோலி விக்கெட்டுகளை இழந்தாலும் அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரது பேட்டிங்கால் இந்திய அணி 249 ரன்களை குவித்தது.
250 ரன்கள் டார்கெட்:
இதையடுத்து, 250 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ரவீந்திரா 6 ரன்னில் அவுட்டாக, வில் யங் நிதானமாக ஆடினார். அவர் வில்லியம்சனுடன் இணைந்து நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினார். ஆனால், அவர் 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன்னில் வருண் சக்கரவர்த்தி பந்தில் போல்டானார்.
வில்லியம்சன் போராட்டம்:
இதையடுத்து, முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான வில்லியம்சன் தனி ஆளாக போராடினார். ஆனால், அவருக்கு மறுமுனையில் யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவருடன் சிறிது நேரம் ஒத்துழைப்பு தந்த டேரில் மிட்செல் 17 ரன்னில் குல்தீப் சுழலில் அவுட்டாக, அடுத்து விக்கெட் கீப்பர் டாம் லாதம் வந்தார்.
மைதானம் நன்றாக சுழலுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் கேப்டன் ரோகித் சர்மா வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜாவை மாறி, மாறி வீச வைத்தார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது. டாம் லாதம் ஜடேஜா சுழலில் 14 ரன்னில் அவுட்டானார். கடந்த போட்டிகளில் பேட்டிங்கில் மிரட்டிய கிளென் ப்லிப்ஸ் வந்ததும் சிக்ஸர் அடித்து மிரட்ட, அவருக்கு வருண் சக்கரவர்த்தி வில்லனாக மாறினார். வருண் சுழலில் ப்லிப்ஸ் 12 ரன்னில் அவுட்டானார்.
81 ரன்னில் அவுட்:
151 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்தாலும் நியூசிலாந்தின் வில்லியம்சன் தனி ஆளாக போராடினார். அரைசதத்தை கடந்து நியூசிலாந்தின் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்தார். பந்துகள் குறைவாக ரன்ரேட் அதிகரிக்க வில்லியம்சன் பேட்டிங்கில் வேகத்தை கூட்டினார். அவர் பவுண்டரிகளாக விளாசி ரன்களை அதிகரித்தார்.
ஆனாலும், மறுமுனையில் ப்ராஸ்வெல் 2 ரன்னில் அவுட்டாக, இந்தியாவிற்கு தலைவலி தந்த வில்லியம்சன் அக்ஷர் படேல் சுழலில் ஸ்டம்பிங் ஆனார். அவர் 120 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 81 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்பின்னரே இந்திய அணிக்கு வெற்றி முழு வாய்ப்பானது. வில்லியம்சன் அவுட்டான பிறகு கேப்டன் சான்ட்னர் அதிரடி காட்ட ஆரம்பித்தார். அவர் சிக்ஸர், பவுண்டரி அடித்து மிரட்ட நியூசிலாந்துக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்தது.
சுழல் சக்கரவர்த்தி:
ஆனால், சான்ட்னரை வருண் சக்கரவர்த்தி தனது பந்துவீச்சால் போல்டாக்கினார். அவர் 28 ரன்னில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் அவுட்டானார். கடைசியில் நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானாது. இதனால், இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணிக்காக நடப்பு தொடரில் முதன்முறையாக அறிமுகமான தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது.