IND vs NZ: பவுலிங்கில் கலக்கிய ஹென்றி.. பேட்டிங்கில் அசத்திய ஸ்ரேயஸ்! நியூசி.க்கு இந்தியா வச்ச டார்கெட் என்ன?
IND vs NZ: ஸ்ரேயாஸ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் ஆகியோரது பேட்டிங்கால் இந்திய அணி நியூசிலாந்திற்கு 250 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

champions trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கப் போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
தொடக்கம் தடுமாற்றம்:
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் சுப்மன்கில் 2 ரன்னில் அவுட்டாக, ரோகித் சர்மா 15 ரன்னில் அவுட்டானார். கடந்த போட்டியில் சதம் அடித்த விராட் கோலி மீது இந்த போட்டியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அவர் 2 பவுண்டரிகளை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், அவர் பவுண்டரிக்கு முயற்சித்த பந்தை கிளென் பிலிப்ஸ் சூப்பர்மேன் போல பறந்து கேட்ச் பிடித்தார். இதனால், 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.
அக்ஷர் படேல் - ஸ்ரேயாஸ் ஐயர்:
மிகவும் நெருக்கடியான நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் - அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தது. இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். நியூசிலாந்து மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் 6.4 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 15 ஓவர்களில் 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின்பு, ஆட்டத்தில் அக்ஷர் படேல் - ஸ்ரேயஸ் ஜோடி வேகத்தை அதிகரித்தது.
குறிப்பாக, ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடினார். அவர் பவுண்டரிகளை விளாசினர். மற்ற பந்துகளில் ஓரிரு ரன்களை எடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த அக்ஷர் படேலும் நன்றாக அடித்தார். இருவரும் இணைந்து நன்றாக ஆடினர். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிய ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் விளாசினார்.
மிரட்டிய ஸ்ரேயாஸ்:
இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை நெருங்கியபோது அக்ஷர் படேல் அவுட்டானார். அவர் 61 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒத்துழைப்பு தந்தார். அக்ஷர் அவுட்டானாலும் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்தார். அவர் அதிரடி காட்டிக்கொண்டிருந்த நிலையில் அவரை வில்லியம் ஓ ரோர்க்கி அவுட்டாக்கினார். அவர் 98 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கடைசியில் கலக்கிய ஹர்திக்:
அடுத்து நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 29 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். 182 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இந்தியாவிற்காக ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடினார். இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் அதிரடி காட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய அணியை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர் என்றே கூற வேண்டும். இந்திய அணிக்காக பொறுப்புடன் ஆடிய ஹர்திக் பாண்ட்யா 45 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
250 ரன்கள் டார்கெட்:
கடைசியில் இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. இதனால், நியூசிலாந்திற்கு 250 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேத் ஹென்றி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார். ஜேமிசன் 8 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். வில்லியம் ஓ ரோர்க்கி, சான்ட்னர், ரவீந்திரா தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய அணி தனது பந்துவீச்சால் இந்த போட்டியில் வெற்றி பெறுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்காவுடன் அரையிறுதியில் போட்டியிடும்.