இந்திய அணி - நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுடன் அரையிறுதியில் மோதிக்கொள்ளப் போகும் அணிகள் யார்? என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாக இது நடக்கிறது. 


250 ரன்கள் இலக்கு:


இதில் முதலில் பேட் செய்த இந்திய அணிக்காக ரோகித், கில், விராட் கோலி சொற்ப ரன்களில் அவுட்டாக ஸ்ரேயாஸ், அக்ஷர் படேல், ஹர்திக் ஆகியோரது சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 250 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சவால் அளித்து வருகின்றனர். 


2 விக்கெட்டுகள்:


தொடக்க வீரர் ரவீந்திராவை 6 ரன்களல் ஹர்திக் பாண்ட்யா அவுட்டாக்கினார். ரவீந்திரா சிக்ஸருக்கு அடிக்க முயற்சித்த பந்தை அக்ஷர் படேல் அபாரமாக கேட்ச் பிடித்தார். நிதானமாக ஆடிய வில் யங்கை 21 ரன்களில் வருண் சக்கரவர்த்தி பந்தில் போல்டானார். 49 ரன்களில் 2 விக்கெட்டுகள் விழுந்ததால் வில்லியம்சன் - டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடி வந்தனர். 


அனுபவ வீரர் வில்லியம்சன்:


முன்னாள் கேப்டன் வில்லியம்சன் தனது அனுபவ பேட்டிங்கால் ஓரிரு ரன்களாக எடுத்து வருகிறார். ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் அனுப்பி வருகிறார். அவருக்கு மறுமுனையில் டேரில் மிட்செல் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகிறார். இவர்களுக்குப் பிறகு டாம் லாதம், ப்லிப்ஸ், ப்ராஸ்வெல் உள்ளனர். 


சுழல் தாக்குதல்:


இந்த ஜோடியைப் பிரிக்க முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா வீசி வருகின்றனர். மைதானம் சுழலுக்கு ஒத்துழைப்பு தருவதால் அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா மாறி, மாறி வீசி வருகின்றனர். நீண்ட நேரமாக பிரிக்க முடியாத இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். அவரது சுழலில் 35 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த மிட்செல் அவுட்டானார்.


அரையிறுதியில் யாருடன் மோதுவது?


இந்த போட்டியின் வெற்றி, தோல்வி இரு அணிகளின் அரையிறுதி வாய்ப்பை எந்தவிதத்திலும் பாதிக்காது. இருப்பினும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோதப்போவது யார்? என்பதை இந்த போட்டியின் முடிவே தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.