இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பல்வேறு வீரர்களை கொண்டுள்ள நாடு தென் ஆப்ரிக்கா. குறிப்பாக ஏ.பி. டிவிலியர்ஸ், டூ பிளசிஸ், காலீஸ், மோர்னே மோர்க்கல், அல்பி மோர்க்கல், கிரேமி ஸ்மித், ரபாடா, டுமினி, கிப்ஸ், ஸ்டெய்ன், டினி போன்ற பல்வேறு ஆகச் சிறந்த வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்துள்ள தென் ஆப்ரிக்க அணியை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அதாவது ஐசிசி 21 ஆண்டுகள் தடை செய்திருந்தது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆமாம் 21ஆண்டுகள் தடை செய்ய முழுக்க் முழுக்க காரணமே அந்த அணி எடுத்த ஒரு கொள்கை முடிவு தான். 


தவறில் இருந்து தன்னை திருத்திக் கொள்ளும் உலகில் தென் ஆப்ரிக்க அணி மட்டும் என்ன விதிவிலக்கா? 


தென் ஆப்பிரிக்காவின் காலனித்துவ அரசாங்கத்தின் நிறவெறிக் கொள்கையால் உலகளவில் விமர்சனங்களை எதிர் கொண்டது. , இதனால் ஏற்பட்ட அழுத்தத்தின் விளைவாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 1970 இல் தென் ஆப்பிரிக்காவிடமிருந்து டெஸ்ட் அந்தஸ்தைப் பறிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதாவது தென் ஆப்பிரிக்க அணி அந்த கொள்கையில், “ இனிமேல் தென் ஆப்ரிக்க அணி வெள்ளை இனத்தவர்களுடன் மட்டும்தான் கிரிக்கெட் போட்டியில் விளையாடும். கருப்பினத்தவர்களுடன் விளையாடாது. குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மட்டும்தான் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் எனவும் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே உள்ளிட்ட கருப்பின நாடுகளுடன் கிரிக்கெட் விளையாடாது எனவும், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற வெள்ளை இனத்தைச் சேராத நாடுகளுடனும் கிரிக்கெட் விளையாடாது எனவும், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியில் கருப்பினத்தவர்கள் யாரேனும் ஒருவர் இருந்தால் கூட அவர்களுடனும் கிரிக்கெட் விளையாட மாட்டோம் என அந்த கொள்கையில் முழுக்க முழுக்க இனவெறி மற்றும் நிறவெறி அடிப்பைடையில் கொள்கைகள் வகுக்கப்பட்டன.




தென் ஆப்பிரிக்காவின் இந்த இனவெறி கொள்கையை கிரிக்கெட் விளையாடும் நாடுகள் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாடாத நாடுகள் கூட கடுமையாக எதிர்த்தன. இந்த கொள்கையை திரும்பபெறுமாறு ஐசிசி தரப்பில் உத்தரவிடப்பட்ட பின்னரும், தென் ஆப்பிரிக்க அரசு அதனை திரும்பப் பெறாததால், ஐசிசி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தென் ஆப்பிரிக்காவுக்கு தடை விதித்தது மட்டுமின்றி, அந்த அணியுடன் மற்ற நாடுகள் விளையாடவும் கூடாது என உத்தரவு பிறப்பித்தது. இதனால் தென் ஆப்ரிக்க அணி தங்களுக்குள் மட்டும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்தனர். அவர்களால், உலகக்கோப்பை உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. 




தென் ஆப்ரிக்காவில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தங்களாலும், தனது இனவெறி கொள்கையில் இருந்து தென் ஆப்ரிக்கா பின் வாங்கியதாலும் 1991ஆம் ஆண்டில் ஐசிசி அந்த நாட்டின் மீது விதித்திருந்த தடையை நீக்கியது. அதன் பின்னர், 1994-ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி  தென் ஆப்ரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர், மனிதர்களிடையே பாகுபாடுகள் கற்பித்த தென் ஆப்ரிக்க சட்டங்களை எல்லாம் முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, தென் ஆப்ரிக்காவிற்கான புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டுவந்தார். 1996ஆம் ஆண்டு இந்த புதிய அரசியலைமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக, 1995ஆம் ஆண்டு அனைத்து இனத்தவரும் இணைந்து கிரிக்கெட் விளையாட ரக்பி உலகக்கோப்பையை நடத்தினார் மண்டேலா. 


தடை நீக்கப்பட்ட பின்னர் தென் ஆப்ரிக்க அணி தனது முதல் சர்வதேச தொடரை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியாவில் விளையாடியது. கிரிக்கெட் உலகில் இடஒதுக்கீடு மூலம் அணியில் வீரர்களை தேர்வு செய்யும் நாடு தென் ஆப்ரிக்கா மட்டும்தான்.