2021ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள சூழலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தாண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு விருது வழங்கும் படலத்தை தொடங்கியுள்ளது. முதலில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்தாண்டு சிறப்பாக விளையாடிய 4 வீரர்களை ஐசிசி சிறந்த டெஸ்ட் வீரர் 2021 விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த நான்கு வீரர்களுக்கும் மக்கள் வாக்களிக்கும் முறை உள்ளது. அந்த வாக்குகளின் அடிப்படையில் வரும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.
இந்நிலையில் ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் இடம்பெற்றுள்ளார். அவருடன் சேர்ந்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து வீரர் ஜெமிசன் மற்றும் இலங்கையின் டிமுத் கருணரத்னே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினிற்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. முதலில் ஆண்டின் தொடக்கத்தில் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 129 பந்துகளில் 29* ரன்கள் எடுத்து விஹாரியுடன் போட்டியை டிரா செய்ய உதவினார். அதன்பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 32 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார். இங்கிலாந்து தொடர் முழுவதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து தொடரில் மீண்டும் ரவிச்சந்திரன் அஷ்வின் 14 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றார். மேலும் இந்தாண்டு பேட்டிங்கிலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான சென்னையில் சதம் கடந்து அசத்தினார். இந்த ஆண்டு விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 52 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்காரணமாக இவரை ஐசிசி இந்த விருதிற்கு பரிந்துரைத்துள்ளது.
அதேபோல் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்தாண்டு விளையாடியுள்ள 15 டெஸ்ட் போட்டிகளில் 1708 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் 6 சதங்களையும் விளாசியுள்ளார். நியூசிலாந்து அணியின் ஜெமிசன் 5 போட்டிகளில் 27 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இலங்கை வீரர் டிமுத் கருணரத்னே இந்தாண்டு விளையாடியுள்ள 7 போட்டிகளில் 4 சதங்களுடன் 902 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த நான்கு பேரில் யார் 2021ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வெல்ல போகிறார் என்பது வரும் ஜனவரி மாதம் 24ஆம் தேதி தெரிய வரும்.
மேலும் படிக்க: ஜாதி பாகுபாடு, குடும்ப வறுமை.. தடைகளை தகர்த்த தமிழக கிரிக்கெட் வீரர் சிலம்பரசனின் கதை