2021ஆம் ஆண்டிற்கான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி வரை தமிழ்நாடு அணி முன்னேறியிருந்தது. இறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி விஜேடி கணக்குப்படி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இருப்பினும் இந்தத் தொடர் முழுவதும் தமிழ்நாடு அணி ஒரு குழுவாக சிறப்பாக செயல்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் ஒரு வீரர் சிறப்பாக விளையாடி அசத்தினர். 


குறிப்பாக நாக்அவுட் சுற்றில் காலிறுதியில் ஜெகதீசன் சதம் கடந்தார். அரையிறுதியில் பாபா அப்ரஜித் சதம் கடந்தார். அதன்பின்னர் இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக் சதம் கடந்தார். இப்படி ஒரு குழுவாக தமிழ்நாடு அணி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் ரகுபதி சிலம்பரசன் இடம்பெற்று இருந்தார். அவர் இந்தத் தொடரில் 15 விக்கெட் வீழ்த்தினார். அவருடைய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் இலங்கை பந்துவீச்சாளர் மலிங்காவை போல் பந்துவீசும் ஸ்டையிலை கொண்டவர். இவர் கடந்த வந்த பாதை என்ன? உடைத்த தடைகள் என்னென்ன?


இது தொடர்பாக அவர் ‘த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கடந்த வந்த இக்கட்டான சூழல் தொடர்பாக பேசியுள்ளார்.


சாதிய பாகுபாடு:


கடலூர் மாவட்டத்தின் சேந்திரகிள்ளை என்ற கிராமத்தில் ரகுபதி சிலம்பரசன் பிறந்தார். இவருடைய கிராமத்தில் அதிகளவில் சாதிய பாகுபாடுகள் இருந்துள்ளது. இதன்காரணமாக இவரை யாரும் கிரிக்கெட் விளையாடும் சேர்த்து கொள்ளவில்லை. இவர் தனக்கு கிடைத்த தேங்காய் மட்டை மற்றும் ரப்பர் பந்தை வைத்து தனியாக விளையாடியுள்ளார். அத்துடன் அந்த மட்டையை வைத்து தன்னால் முடிந்த அளவிற்கு வேகமாக அடித்து பழகியுள்ளார். மேலும் வேகமாக பந்துவீசவும் பயிற்சி செய்துள்ளார். 


குடும்ப வறுமை:


இவர் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் வீட்டில் ஒரு டிவி கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக படிப்பில் தீவிர ஆர்வம் காட்டிய சிலம்பரசன் 10-ஆம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவராக வந்துள்ளார். அதனால் புதூரிலுள்ள ஒரு டிப்ளோமா கல்லூரியில் இலவசமாக இடம் கிடைத்துள்ளது. அதை வைத்து டிப்ளோமா படிப்பை முடித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் இலவச தொலைக்காட்சி வழங்கப்பட்டுள்ளது. அந்த தொலைக்காட்சியில் தான் முதல் முறையாக அவருடைய கனவு நாயகன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்துள்ளார். அப்போது தான் இவர் முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒரு கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளார். 


மலிங்காவின் பந்துவீசும் ஸ்டைல்:


இவருடைய தம்பி ஒருமுறை தொலைக்காட்சியில் இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா பந்துவீசுவதை பார்த்து அதை போல் வீசியுள்ளார். அந்தப் பந்துகளை சிலம்பரசன் எதிர்கொள்ள தவித்துள்ளார். அந்தக் காரணத்திற்காக அவரும் மலிங்கா ஸ்டையில் பந்துவீச்சை காப்பி அடித்து அதேபோன்று பந்துவீச தொடங்கியுள்ளார். 


வாழ்க்கையை மாற்றிய தருணம்:


சிலம்பரசன் கடலூர் மாவட்ட அணிக்காக சில போட்டிகளில் பங்கேற்று இருந்தார். அத்துடன் அவ்வப்போது சில கிளப் போட்டிகளில் விளையாடிவந்துள்ளார். தன்னுடைய தாயின் கஷ்டம் அறிந்து சில நாட்கள் கிரிக்கெட் விளையாட்டை விட்டு சில வேலைகளை செய்து தன் குடும்பத்திற்கு உதவியுள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் ஒரு உள்ளூர் போட்டியில் பங்கேற்க சென்றபோது தமிழ்நாடு அணியின் தற்போதைய கேப்டன் விஜய் சங்கர் அங்கு வந்துள்ளார். அவர் சிலம்பரசன் பந்துவீசுவதை பார்த்து அவரை இந்தியா சிமெண்ட்ஸ் லீக் அணிக்காக விளையாட அழைத்துள்ளார். அங்கு சென்று இவர் சிறப்பாக பந்துவீசி அணியில் இடம்பிடித்தார். அத்துடன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரிலும் சிறப்பாக பந்துவீசினார். 






தமிழ்நாடு அணியில் சிலம்பரசன்:


இந்தாண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு அணியில் இவர் இடம்பிடித்தார். அதற்கு முன்பாக அணியில் இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் விளையாடும் போது இவருக்கு தமிழ்நாடு அணியில் இருந்த பாபா அப்ரஜித், மலோலன் ரங்க்ராஜன் போன்ற பலர் நிதியுதவி மற்றும் படிப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி உதவி செய்துள்ளனர். அதன்விளைவாக தற்போது தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் வேகப்பந்துவீச்சாளராக இவர் உருவெடுத்துள்ளார் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. நடராஜனிற்கு பிறகு இவரும் ஐபிஎல் அணியில் இடம்பிடித்து அசத்துவார் என்று நம்புவோம். 


மேலும் படிக்க: 327 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா..! சொன்னதை செய்துகாட்டிய லுங்கி நிகிடி..!