சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சம பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த ஐசிசி ஆண்டு மாநாட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், “பாலின சமத்துவத்தை நோக்கி ஒரு முக்கிய படி எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு சம பரிசு வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதன்மூலம் அனைவரும் ஒன்றாக நாம் வளர்ச்சி பெறுவோம். இந்த முக்கியமான முயற்சியை அடைய உதவிய சக நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் கிரிக்கெட் தொடர்ந்து செழித்து வளரும் எதிர்காலத்தை நோக்கி உழைப்போம்.” என பதிவிட்டு இருந்தார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்ற ஐசிசி ஆண்டு மாநாட்டின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. வருகின்ற 2020 ம் ஆண்டுக்குள் பரிசுத் தொகை சமநிலையை அடைவதற்கான அனைத்து முயற்சியும் எடுக்கும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே தெரிவிக்கையில், “ எங்கள் விளையாட்டு வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க தருணம், ஐசிசி உலகளாவிய தொடர்களில் விளையாடும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான வெகுமதி அளிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
2017 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் விளையாடும் ஐசிசி தொடர்களில் பரிசுத் தொகையை உயர்த்தி வருகிறோம். மேலும் சமமான பரிசுத் தொகையை அடைவதில் தெளிவான கவனம் செலுத்தி வருகிறோம், இங்கிருந்து, ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்வது, ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற அதே பரிசுத் தொகையைக் கொண்டு செல்லும். டி20 உலகக் கோப்பை மற்றும் U19 உலகக் கோப்பைகளுக்கும் இவை பொருந்தும்.” என தெரிவித்தார்.