இந்தியாவின் புகழ்பெற்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் ஏப்ரல் 24, 2023 திங்கட்கிழமை தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளின் போது, ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் அவருக்கு புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஸ்டேடியத்தில் ஒரு ஸ்டாண்டிற்குப் பெயர் சூட்டி கௌரவித்தது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் எப்போதுமே சச்சினுக்கு ஸ்பெஷலான விஷயமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் இரண்டு சதங்கள் உட்பட அந்த மைதானத்தில் ஏழு சதங்கள் அடித்துள்ளார்.
டெசர்ட் ஸ்டோர்ம் இன்னிங்ஸ்
ஏப்ரல் 22, 1998 அன்று ஷார்ஜாவில் வீசிய 25 நிமிட மணல் புயலால் அவரது பேட்டிங் குறுக்கிடப்பட்டபோது, மீண்டும் ஆட்டம் துவங்க, அதில் 143 ரன்களை குவித்து போட்டியை வென்று, அந்த முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்ல உதவினார். அவர் ஆடிய இன்னிங்சிற்கு டெசர்ட் ஸ்டோர்ம் இன்னிங்ஸ் என்றே பெயர் கிடைத்தது. அந்த தொடரின் இறுதிப்போட்டி அவரது 25வது பிறந்தநாளில் அதே ஷார்ஜாவில் நடைபெற்றது. அதில் 134 ரன் குவித்து இந்தியா பட்டத்தை வெல்ல உதவினார்.
'சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட்'
ஐம்பதாவது பிறந்தநாளை ஒட்டி, ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள வெஸ்ட் ஸ்டாண்டுக்கு 'சச்சின் டெண்டுல்கர் ஸ்டாண்ட்' என்று பெயரிடப்பட்டது. விழாவில் ஷார்ஜா கிரிக்கெட் சிஇஓ கலாஃப் புகாரீர் கலந்து கொண்டார். இந்த விழாவில் டெண்டுல்கரால் நேரில் பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், முன்னரே அந்த தேதியில் வேறு வேலையில் கமிட் ஆகிவிட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார். ஷார்ஜாவில் விளையாடுவது தனக்கு எப்போதும் மறக்க முடியாத ஒன்று என்றும் அவர் கூறினார்.
ஷார்ஜாவில் விளையாடுவது அற்புதமான அனுபவம்
சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், "நான் அங்கு இருந்திருக்க வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக முன்னரே ஒப்புக்கொண்ட சில கடமைகள் பிறந்த நாளன்று இருந்தன. ஷார்ஜாவில் விளையாடுவது எப்போதுமே ஒரு அற்புதமான அனுபவம். பரபரப்பான சூழல் முதல், அன்பு, பாசம் மற்றும் ஆதரவு என பல விஷயங்கள் இங்கு நிறைந்துள்ளன. ஷார்ஜா இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சிறப்புவாய்ந்த இடமாக உள்ளது," என்று சச்சின் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றி தெரிவித்த சச்சின்
தனது 50 வது பிறந்தநாளில் இந்த வகையான செயலை செய்த ஷார்ஜா கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஷார்ஜா கிரிக்கெட் அணிக்கு அவர் நன்றி தெரிவித்தார். "டெசர்ட் ஸ்டோர்ம் போட்டியின் 25 வது ஆண்டு மற்றும் எனது 50 வது பிறந்தநாளில் இந்த வகையான செயலை செய்ததற்காக புகாரிர் மற்றும் அவரது குழுவினருக்கு ஒரு பெரிய நன்றி," என்று அவர் மேலும் கூறினார். திங்களன்று, சிட்னி கிரிக்கெட் மைதானம் புகழ்பெற்ற பேட்டர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் பிரையன் லாராவின் பெயரிடப்பட்ட வாயில்களைத் திறந்து வைத்த நிகழ்வில் சச்சின் கலந்துகொண்டார். சச்சின் டெண்டுல்கர் 2013-இல் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வாழ்நாளில் 100 சர்வதேச சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையோடு ஓய்வு பெற்றார்.