Gautam Gambhir: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர், யார் காலிலும் விழக்கூடாது என முடிவெடுத்தது தொடர்பாக பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மறுக்கப்பட்ட வாய்ப்பு:
முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்பீர் கடந்த 2007 மற்றும் 2011ம் ஆண்டில், இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். தற்போது பாஜக எம்.பி., ஆக உள்ள அவரது ஆலோசனையின் கீழ் செயல்பட்ட கொல்கத்தா அணி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரை கைப்பற்றியது. அதோடு, கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான், அண்மையில் தான் அளித்த பேட்டியில், தேர்வுக் குழுவினரின் காலில் விழாததால், தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட அனுபவம் தொடர்பாக பேசியுள்ளார்.
காலில் விழவில்லை - கம்பீர்:
சக கிரிக்கெட் வீரரான அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் வளர்ந்து கொண்டிருந்த போது, எனக்கு சுமார் 12 அல்லது 13 வயதாக இருந்தபோது, எனது முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிக்கு நான் தேர்வு செய்யப்படவில்லை. காரணம் நான் தேர்வுக்குழு அதிகாரியின் கால்களை தொடவில்லை. அன்றிலிருந்து நான் அதையே உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டேன். இனி நான் ஒருபோதும் யாருடைய கால்களையும் தொடமாட்டேன், யாரையும் என் கால்களைத் தொடவும் விடமாட்டேன்” என கம்பீர் பேசினார்.
நம்பிக்கையே அவசியம் - கம்பிர்:
16 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர், ரஞ்சிக் கோப்பை அல்லது எனது சர்வதேசப் போட்டிகளில் தோல்வியுற்ற ஒவ்வொரு முறையும் நான் தோல்வியடைந்ததை நன்று நினைவில் வைத்திருக்கிறேன், நீங்கள் ஒரு வளமான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று மக்கள் கூறுவார்கள். நீங்கள் கிரிக்கெட் விளையாட வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் உங்கள் அப்பாவின் தொழிலில் சேரலாம் என்றனர். எனது தலையில் ஓடிக்கொண்டு இருந்த மிகப்பெரிய கருத்து அதுதான். மற்ற அனைத்தையும் விட கிரிக்கெட் தான் எனக்கு அதிகம் வேண்டும் என நான் உணர்ந்ததை மக்கள் உணரவில்லை. அந்த எண்ணத்தை நான் வீழ்த்த வேண்டும் என நினைத்தேன். அதை செய்தபோது, வேறு எந்த கருத்தும் என்னை தொந்தரவு செய்யவ்ல்லை.” என கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஷாருக்கான் ஒரு சிறந்த ஓனர்:
கொல்கத்தா அணியின் இணை உரிமையாளரான ஷாருக்கான் உடனான தனது நட்பை பற்றியும் கம்பீர் அந்த பேட்டியில் விளக்கினார். அதன்படி, “இது உரிமையாளரின் நம்பிக்கை பற்றியது மற்றும் கடந்த காலங்களில் பலமுறை கூறியுள்ளேன். நான் பணியாற்றிய சிறந்த உரிமையாளர் ஷாருக்கான் தான். காரணம் இப்போது நான் மீண்டும் கொல்கத்தா அண்க்கு திரும்பியதால் அல்ல. காரணம் நான் கேப்டனாக இருந்த ஏழு வருடங்களில் கிரிக்கெட் பற்றி 70 வினாடிகள் கூட அவர் என்னிடம் பேசியதில்லை. ஒரு கேள்வியை கூட என்னிடம் கேட்டதில்லை” என கம்பீர் தெரிவித்துள்ளார்.