இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆனால் அதன் காலக்கெடு (நேற்றுடன்) மே 27ம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், இன்று வரை அடுத்த இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.


இந்நிலையில், ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இதுவரை 3000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான விண்ணப்பங்கள் போலியானவை என்றும் தெரிவித்துள்ளது. 


மோடி, அமித்ஷா பெயரில் விண்ணப்பம்:


இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 3000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, வீரேந்திர சேவாக் உள்பட ஏராளமானோரது போலி விண்ணப்பங்கள் வந்துள்ளது. ஆனால் இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் போலியானவை. விண்ணப்பத்திற்கான கூகுள் படிவத்தை பி.சி.சி.ஐ. பகிர்ந்த நிலையில், சிறிது நேரத்திலேயே இந்தப் படிவம் அகற்றப்பட்டது.


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார்? 


இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார். தற்போது அவர் இரண்டாவது முறையாக பதவி வகித்து வருகிறார். மீண்டும் தலைமை பயிற்சியாளராக டிராவிட்டை தொடர, பிசிசிஐ வலியுறுத்தினாலும், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்று தெரிவித்து டிராவிட் மறுத்துள்ளார்.


முன்னதாக, 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையுடன் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது. ஆனால், பிசிசிஐயின் வேண்டுகோளுக்கு இணங்க நீட்டித்துகொண்ட டிராவிட், வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையுடன் தனது பதவிக்காலத்தை முடித்து கொள்கிறார். எனவே, இதற்குப் பிறகு யார் அந்த பொறுப்பை வகிப்பார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. ராகுல் டிராவிட் பதவி காலத்தின் கீழ் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே சிறப்பாக செயல்பட்டது.


2023 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை மட்டுமே பிடித்தது. இந்த ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, தலைமை பயிற்சியாளர் டிராவிட் - கேப்டன் ரோஹித் கூட்டணியில் இந்திய அணி ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றது. 


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பல முன்னாள் வீரர்களின் பெயர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் அடிப்பட்டது. அதில், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், கௌதம் கம்பீர், மஹாலே ஜெயவர்த்தனே, ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டவர்கள் பெயர்கள் அதிகம் பேசப்பட்டது. ஆனால் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தானும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். இந்த சூழலில், கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.