தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்திய மகளிர் அணியும் தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் மோதும் முதல் ஒருநாள் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


தத்தளித்த இந்தியா:


இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆட்டத்தை ஷபாலி வர்மாவும், ஸ்மிரிதி மந்தனாவும் தொடங்கினர். ஷபாலி வர்மா 7 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த ஹேமலதா 12 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்  ஸ்மிரதி மந்தனாவுடன் ஜோடி சேர்ந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்களுக்கு அவுட்டானார்.


அதிரடியாக ஆடக்கூடிய ரோட்ரிக்ஸ் நிதானமாக ஆட மறுமுனையில் ஸ்மிரிதி மந்தனா ஓரிரு ரன்களாக இந்திய அணிக்காக திரட்டினார். ஆனால், ரோட்ரிக்ஸ் 17 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 3 ரன்களுக்கு அவுட்டானார். இந்திய அணி 22 ஓவர்களில் 99 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ஸ்மிரிதி மந்தனா – தீப்தி ஷர்மா ஜோடி சேர்ந்தனர்.


தனி ஆளாக காப்பாற்றிய மந்தனா:


தீப்தி ஷர்மாவை மறுமுனையில் வைத்துக்கொண்டு ஸ்மிரிதி மந்தனா தனி ஆளாக போராடினார். அவர் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. இதனால், இந்திய அணி 150 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடி வந்த தீப்தி ஷர்மா காகா பந்தில் 37 ரன்களுக்கு போல்டானார். அடுத்து வந்த பூஜா வஸ்தரகர் நன்றாக ஒத்துழைப்பு அளிக்க, அரைசதத்தை கடந்தும் ஸ்மிரிதி மந்தனா அசத்தலாக ஆடினார்.


இந்திய மண்ணில் முதல் சதம்:


சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா அபார சதத்தை விளாசினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மந்தனாவுக்கு இது 6வது சதம் ஆகும். ஆனால், இந்திய மண்ணில் ஸ்மிரிதி மந்தனாவுக்கு இதுவே முதல் சதம் ஆகும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அவருக்கு இது 2வது சதம் ஆகும். சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 117 ரன்களுக்கு அவுட்டானார். 127 பந்துகளை எதிர்கொண்ட அவர் 12 பவுண்டரிகளையும், 1 சிக்ஸரையும் விளாசினார். கடைசி கட்டத்தில் பூஜா வஸ்தரகர் அவுட்டாகாமல் 48 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 37 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்களை குவித்தது. தற்போது, தென்னாப்பிரிக்க அணி இலக்கை நோக்கி களமிறங்கி ஆடி வருகிறது.


மேலும் படிக்க: Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து


மேலும் படிக்க: Trent Boult: டி20 உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து அணி.. ஓய்வை அறிவித்த ட்ரெண்ட் போல்ட்..!