Jasprit Bumrah: ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம் பிடித்த பும்ரா:

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில்,  இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1 இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் தான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் தான் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்:

விசாகப்பட்டினத்தில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்ந்து 91 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து, 9 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல்முறையாக, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த அஷ்வின், ஜடேஜா மற்றும் பிஷன் பேடி ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே, டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கபில் தேவ் இரண்டாவது இடத்தை பிடித்தது, ஜாகிர் கான் மூன்றாவது இடத்தை பிடித்ததுமே, டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் சிறந்த நிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தரவரிசைப் பட்டியலில் சரிந்த அஸ்வின்: 

தரவரிசைப் பட்டியலில் 3 இடங்கள் முன்னேறி, பும்ரா முதலிடத்தை (881 புள்ளிகள்) பிடித்துள்ளார். அதேநேரம், இரண்டு இடங்கள் சரிந்து அஸ்வின் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல், இந்த தரவரிசைப் பட்டியலில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம் வகித்து வந்தார். இந்நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த அஸ்வின் தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். தென்னாப்ரிக்காவின் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்தில் வகிக்கிறார்.  

டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியல்:

ரேங்கிங் வீரரின் பெயர்கள் புள்ளிகள்
1 ஜஸ்பிரித் பும்ரா 881
2 ககிசோ ரபாடா 851
3 ரவிச்சந்திரன் அஸ்வின் 841
4 பாட் கம்மின்ஸ் 828
5 ஜோஸ் ஹேசல்வுட் 818
6 பிரபாத் ஜெயசூர்யா 783
7 ஜேம்ஸ் ஆண்டர்சன் 780
8 நாதன் லயன் 746
9 ரவீந்திர ஜடேஜா 746
10 ஒல்லி ராபின்சன் 745