நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் தேர்வு சிக்கலில் உள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி மீண்டும் திரும்புவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 


அணியின் பெயரை இறுதி செய்வதற்கு முன்பு விராட் கோலியின் பதிலுக்காக தேர்வாளர்கள் காத்திருக்கிறார்கள்.  கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான அணி நேற்றே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், இப்போது தேர்வுக்குழு இந்திய அணியை இன்று அல்லது நாளை அறிவிக்கலாம் என்று தெரிகிறது. இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி வருகின்ற பிப்ரவரி 14ம் தேதி ராஜ்கோட்டியில் தொடங்குகிறது. 


3வது டெஸ்டிலும் சந்தேகமா..?


இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு இரண்டு போட்டிகளில் இருந்து விலகினார். மூன்றாவது டெஸ்டில் விராட்  கோலி திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விராட் கோலி விளையாடுவாரா என்பது குறித்து பிசிசிஐக்கு இதுவரை தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என்ற அச்சம் தற்போது அதிகரித்துள்ளது. மூன்றாவது டெஸ்டில் விராட் கோலியை தவிர, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பெறுவது சந்தேகம். 


மீண்டும் அணியில் கே.எல்.ராகுல்:


இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளில் கே.எஸ்.பாரத்தை அணியில் இருந்து தேர்வாளர்கள் நீக்கலாம். இவருக்கு பதிலாக துருவ் ஜூரல் விக்கெட் கீப்பராக இந்திய அணியில் அறிமுகமாகலாம். நீண்ட நாட்களாக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ள இஷான் கிஷன் இந்த தொடரில் இடம்பெறுவது கடினம். அதேபோல், ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தால், ஜெய்தேவ் உனத்கட்டுக்கு வாய்ப்பு வழங்கலாம். மேலும், இரண்டாவது போட்டியில் இருந்து விலகிய கே.எல்.ராகுல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கலாம். இந்திய அணியில் முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை நான்கு இன்னிங்ஸ்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதுதவிர இரண்டாவது டெஸ்டில் விளையாடிய ரஜத் படிதார், ரோஹித் சர்மா, கே.எஸ்.பாரத் ஆகியோர் பேட்டிங்கில் இன்னும் பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை. எனவே, வருகின்ற போட்டிகளில் விராட் கோலி திரும்பினால் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய பலமாக இருக்கும். 


தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து: 


இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பரபரப்பான திருப்பத்தை எட்டியுள்ளது. முதல் டெஸ்டில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் மீண்டும் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர் தற்போது 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது. 


கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் இங்கிலாந்து அணியால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. ஆனால் இந்த முறை இங்கிலாந்து அணி புதிய அணுகுமுறையுடன் இந்தியாவுக்கு சவால் விடுகிறது.