இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி நேற்று தொடங்கிய டி20 தொடரில் முதல் போட்டியை ஆடியது. இந்த போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி இந்திய அணி ஆடும் 200வது டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு வாய்ந்த போட்டியில் இந்திய அணியை வழி நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா தேசிய கீதம் இசைக்கும் போது உணர்ச்சிவசப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



டி20 போட்டிகளில் கேப்டனாக


டி20 உலகக் கோப்பை 2022-ற்கு பின் ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியை இதுவரை சிறப்பாக வழிநடத்தி, ஆடிய இரண்டு தொடரிலும் இறுதிப்போட்டி வரை கொண்டு சென்ற பாண்டியா முதல்முறை (2022) கோப்பையையும் வென்று தந்தார். அவரது அற்புதமான கேப்டன்சி காரணமாக இந்திய அணி கேப்டன் பதவி தேடி வந்தது. அதோடு இந்திய அணியின் ஒருநாள் போட்டி வைஸ் கேப்டனாகவும் தற்போது மாற்றப்பட்டுள்ளார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி 2 ஆட்டங்களில் கூட ஹர்திக் பாண்டியா கேப்டனாக விளையாடினார். இதில் இரண்டாவது போட்டியில் அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆனாலும், மூன்றாவது போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 


தொடர்புடைய செய்திகள்: பீட்சாவில் பீஸ் குறைவாக இருந்ததால் அதிருப்தி.. ரூ.41.2 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்த அமெரிக்கர்!


இந்திய அணி தோல்வி


மூன்றாவது போட்டியில் ஹர்திக் பேட்டிங்கில் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து அணியை பெரிய ஸ்கோருக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ரோவ்மன் பவல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட்டிங் ஆடி மேற்கிந்திய தீவுகள் அணி 149 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில், 9 விக்கெட் இழந்து, இலக்கை எட்ட முடியாமல் 145 ரன்கள் மட்டுமே குவித்து, 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.






கண்கலங்கிய ஹர்திக்


இதற்கு முன்னர் பல டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி இருந்தாலும், வரலாற்று சிறப்புமிக்க இந்த 200வது போட்டியை வழி நடத்திய ஹர்திக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார். இந்த போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவது யாராக இருந்தாலும் அது பெருமை மிகு தருணம்தான். அத்தகைய வரலாற்றை கொண்டிருக்கிறது இந்திய டி20 அணி. முதல் உலகக்கோப்பை வென்றது தொடங்கி, தோனி, கோலி, ரோகித், தவான் என ஜாம்பவான்கள் தலைமை தாங்கிய அணியை தலைமை தாங்கும் வாய்ப்பு பாண்டியாவை உருக செய்திருக்கலாம். அது இந்திய தேசிய கீதம் ஒலிக்கும்போது அவர் கண்களில் கண்ணீரையும் வர வைத்தது. தற்போது அவர் கண்ணெரை துடைக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.