2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு அணிகளுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ளன. அணிகள் தங்கள் திட்டங்களை விரைவாக செயல்படுத்தி முடியல்வாக ஒரு நிலையான அணியை எட்டிவிட்டால் உலகக்கோப்பையில் கூடுதல் பலம் கிடைக்கும். மேலும், இந்த முறை போட்டியை நடத்துவது இந்திய அணி என்பதால் இந்திய அணி மீதான பார்வை அதிகரித்துள்ளது. ஏனென்றால் கடைசி மூன்று உலகக்கோப்பைகளில் போட்டியை நடத்தும் அணியே கோப்பையை வென்றுள்ளது. 2011 இல் இந்தியா, 2015 இல் ஆஸ்திரேலியா மற்றும் 2019 இல் இங்கிலாந்து ஆகும். எனவே உறுதியாக வரும் ஆண்டு அதே போல கோப்பையை வெல்ல இந்திய அணி மீது அழுத்தம் அதிகமாக இருக்கும். இறுதியாக ஐசிசி பட்டத்துக்கான காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வரும் முனைப்பில் இந்திய அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் கோப்பை தவறி வருவதால் சில ஸ்ட்ரிக்ட்டான முடிவுகளை எடுக்கும் முனைப்பில் அணி நிர்வாகம் உள்ளதாக சில நாட்களாகவே தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அடிக்கடி காயம் காரணமாக விளையாட முடியாமல் போகும் ரோகித் மற்றும் தொடர்ந்து மோசமான ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல் ஆகியவர்கள் குறித்த கவலை நீடித்து வருவதால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையலாம் என்று கூறப்படுகிறது. அதில் முக்கியமாக கே.எல்.ராகுலின் இருப்பு பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. அவருக்கு பதிலாக அதிரடி ஃபார்மை காட்டி வரும் கில், கிஷன் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என்ற பேச்சுத் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. 



யார் ஓப்பனிங்?


ரோஹித் சர்மா லெவன் அணியில் களமிறங்குவது உறுதியான நிலையில், அவருடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்குவது யார் என்ற கேள்விக்குறி உள்ளது. முதல் இரண்டு விருப்பங்கள் வெளிப்படையாக ராகுல் மற்றும் தவான் என்று இருந்தது ஆனால் இருவருமே தடுமாறி வரும் நிலையில், இஷான் சமீபத்தில் ஒரு அற்புதமான இரட்டை சதம் அடிக்க, கில் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஓப்பனிங் கொடுக்க தேர்வாளர்கள் கண்கள் திசை திரும்பியுள்ளன. உலகக்கோப்பைக்கு இன்னும் மாதங்கள் இருப்பதால் அதற்கு இடையில் நிறைய மாறலாம் ஆனால் இஷானுக்கு வாய்ப்புகள் கிடைத்து தொடர்ந்து ரன்களை குவித்தால், ராகுலும் தவானும் அணியில் இருப்பது கடினம்தான். 10 மாதங்களில் உலகக் கோப்பை வரும்போது இந்தியாவின் முதல் தேர்வு தொடக்க ஆட்டக்காரராக இஷான் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கருதுகிறார்.


தொடர்புடைய செய்திகள்: IND vs SL: இலங்கைத் தொடரில் ஹர்திக் தலைமையில் களமிறங்கும் இளம் பட்டாளம்..? 2023ல் அதிரடி மாற்றமா..?


இஷான் ஓப்பன் செய்யவேண்டும்


"இந்த அதிரடி இரட்டை சத்தின் மூலம், 2023 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ODI உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஓப்பன் செய்வதற்காக இஷான் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளார். இது நடக்குமா? என்று கேட்டால்… எனக்குத் தெரியாது. இது நடக்க வேண்டுமா? என்று கேட்டால்… ஆமாம், அதுதான் நடக்க வேண்டும். ODI வரலாற்றில் அதிவேக 200 அடித்துள்ளார். ஆனால், இதனை அவர் தொடர்ந்து செய்து காட்ட வேண்டும், மேலும் உடல் தகுதியுடன் இருக்கவேண்டும், அப்படி அடுத்த சில மாதங்களில் சென்றால், அவர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கான உறுதியான தொடக்க வீரராக கண்டிப்பாக இருக்க வேண்டும்" என்று ப்ரட் லீ தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கூறினார்.



இஷானுக்கு அறிவுரை


மேலும் பேசிய அவர், "இஷான் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க, தெளிவாகத் இருக்க வேண்டும். இரட்டை சதத்திற்கு பிறகு இன்னும் எதிர்பார்ப்புகள் இருக்கும். இருப்பினும், அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக பாராட்டுக்கள் பிரச்சனைகளை கொண்டு வரும். எனவே இஷான் கிஷானுக்கு எனது அறிவுரை என்னவெனில்... மைல்கல்லை மறந்து விடுங்கள், இரட்டை சதத்தை விரைவில் மறந்து விடுங்கள், சாதிக்க இன்னும் பெரிய மைல்கற்கள் உள்ளன, இன்னும் உயரமான உயரங்களை அடைய வேண்டும். செயல்பாட்டில் மட்டும் கவனம் செலுத்தி, பிட்டாக இருங்கள் மற்றும் பெரிய ரன்களை அடித்துக் கொண்டே இருங்கள்." என்றார்.


இரட்டை சதம் குறித்து..


மேலும், "இதுகுறித்து பேசுவது சற்று தாமதம்தான், ஆனால் சில நாட்களுக்கு முன்பு இஷான் கிஷானிடம் இருந்து நாம் பார்த்தது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. பங்களாதேஷிடம் பதில் இல்லை. ODI வரலாற்றில் அதிவேக இரட்டைச் சதம் அது. வெறும் 132 பந்துகளில் 210 ரன்கள்... 24 பவுண்டரிகள், 10 அபாரமான சிக்ஸர்கள். எல்லா திசையிலும் ஷாட்களை அடித்து ஒரு மூர்க்கத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நம்பமுடியாத பேட்டிங், அவர் எளிதாக ஒரு டிரிபிள் சதம் அடித்திருக்கலாம். மறுமுனையில் மாஸ்டர் விராட் கோலி இருக்கும்போது இதனை செய்தது இன்னும் சிறப்பு. நான் அந்த போட்டியில் ரசித்தது இஷான் கிஷனின் ஷாட் மேக்கிங் மட்டுமல்ல, இஷான் 200 வது ரன் எடுத்தபோது கோஹ்லியின் கொண்டாட்டமும்தான். இருவருக்கும் இடையே என்ன ஒரு சிறந்த தோழமை",என்று பிரட் லீ குறிப்பிட்டார்.