ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக், நான்காம் நிலை பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 49 வயதான இவர், தற்போது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜாம்பவான் ஹீத் ஸ்ட்ரீக்:
அவரது குடும்பத்தினர் லண்டனில் இருந்து அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய ஜிம்பாப்வே அணியில் அங்கம் வகிக்கும் சீன் வில்லியம்ஸ், ஸ்ட்ரீக்கின் உடல் நிலை குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து வில்லியம்ஸ் பேசுகையில், "ஹீத்துக்கு நான்காம் நிலை பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் உள்ளது. இந்த கட்டத்தில் எனக்குத் தெரிந்ததெல்லாம், தென்னாப்பிரிக்காவில் ஹீத்தின் குடும்பம் அவரை சந்திக்க அழைக்கப்பட்டிருப்பதுதான். அதன் விவரங்கள் எதுவும் எனக்குத் தெரியவில்லை.
நான் ஹீத்துக்கு மெசேஜ் செய்தேன். அவர் பதிலளித்தார். ஆனால், இந்த கட்டத்தில் அவரது குடும்பத்தை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது என நினைக்கிறேன். புற்றுநோய் வேகமாக பரவுவது போல் தெரிகிறது. ஹீத் எனது வழிகாட்டி. நிறைய பேருக்கு நிறைய நல்ல விஷயங்களைச் செய்துள்ளார். அடிப்படையில் எனது வாழ்க்கையை காப்பாற்றினார். அவர் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்" என்றார்.
உயிருக்கு போராடும் ஆபத்தான கட்டம்:
மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்த அவர் அனைவருக்கும் பிடித்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தார். கடந்த 1993ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 2005ம் ஆண்டு வரை 65 டெஸ்ட் மற்றும் 189 ஒருநாள் போட்டிகளில் விளையாடினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சுமார் 5000 ரன்களையும் 455 விக்கெட்களையும் எடுத்து அசத்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஜிம்பாப்வே வீரர், ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் ஜிம்பாப்வே வீரர் போன்ற நிறைய சாதனைகளையும் படைத்துள்ளார்.
ஹீத் ஸ்ட்ரீக்:
2005இல் ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த அவர் தற்போது, கல்லீரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹீத் விரைவில் குணமடைய வேண்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜிம்பாவே நாட்டின் முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் டேவிட் கோல்டர்ட், "இத்தனைக்கும் கடந்த வாரம் அவர் உற்சாகமாக மீன் பிடித்து கொண்டிருந்தார். ஆனாலும் திடீரென அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் எனக்கு ஆலோசகரை போன்றவர். கிரிக்கெட்டின் அடிப்படையில் நிறைய உதவிய அவர் என்னுடைய கேரியரை காப்பாற்றியுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.